3 மணி நேர சிகிச்சை.. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஏ.ஆர்.ரஹ்மான்.. உடல்நிலை எப்படி இருக்கு?
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. தற்போது அவர் வீடு திரும்பியுள்ளதால், ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்ற பின், சர்வதேச அளவில் ஏ.ஆர்.ரஹ்மான் பிரபலமடைந்தார். அதன்பின் இந்திய திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சர்வதேச திரைப்படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இருப்பினும் தமிழ் மொழியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

1992ல் தொடங்கிய பயணம் இதுவரை எந்தவித இடர்பாடுகளும் இல்லாமல் உச்சத்திலேயே இருக்கிறது. அண்மையில் கூட மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கான பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதன்பின் மாமன்னன் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த பாடல்கள் ரசிகர்களால் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. ஏனென்றால் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி இடையிலான காதல் தருணங்கள் வெளிப்பட்டுள்ளது. ஜாலியான தம்பதிகளாக பார்க்கப்பட்ட இருவரும், திடீரென பிரிவதாக கூறினர்.
இருந்தாலும் அவர்களின் முடிவை ரசிகர்கள் ஏற்று, ஏ.ஆர்.ரஹ்மான் இசைப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி வந்தனர். தற்போது தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளின் படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இன்று திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஏ.ஆர்.ரஹ்மான் அனுமதிக்கப்பட்டார்.
லண்டனில் இருந்து சென்னை திரும்பிய அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக தகவல் வெளியாகியது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மானின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தேன். அவர் நலமுடன் விரைவில் வீடு திரும்புவார் என்று பதிவிட்டார். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி இருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அதேபோல் அவரது மகன் ஏ.ஆர்.அமீன், தந்தை ஏ.ஆர்.ரஹ்மான் நலமுடன் இருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications