‛இசை யூனிவர்ஸ்னா.. அதுல எங்க அப்பா மவுண்ட் எவரெஸ்ட்’.. இசையா? மொழியா? கார்த்திக் ராஜா பளீச் பதில்
சென்னை: ‛‛இசை யூனிவர்ஸ்னா அதுல எங்க அப்பா மவுண்ட் எவரெஸ்ட்'' என்று இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா கூறினார். தமிழ் சினிமாவில் இசையா? மொழியா? என்ற பிரச்சனை நிலவி வரும் சூழலில் கார்த்திக் ராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இளையராஜா.. தனது மெல்லிசையால் இளைஞர்கள் முதல் முதியவர்களை கட்டிப்போட்டு வைத்துள்ள இசையமைப்பாளர்.. இன்னொரு புறம் வைரமுத்து.. தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த பாடல்களை கொடுத்த கவிஞர், பாடலாசிரியர். தேனி மாவட்டத்தை சேர்ந்த இளையராஜா, வைரமுத்து ஆகியோர் ஒன்றாக இணைந்து கொடுத்த பாடல்களுக்கு இன்றும் ரசிகர்கள் ஏராளம்.

இந்நிலையில் தான் இளையராஜா மற்றும் வைரமுத்து இடையே நீண்டகாலமாக மோதில் உள்ளது. இருவரும் சேர்ந்து பல ஆண்டுகளாக பணி செய்யாமல் உள்ளனர். இந்நிலையில் தான் தற்போது இசை பெரியதா? மொழி பெரியதா? என்கிற சர்ச்சை வெடித்துள்ளது.
இசையும் மொழியும் இணைந்தால் தான் நல்ல பாடல் உருவாகும் என சமீபத்தில் வைரமுத்து பேசினார். இதற்கு பதிலடியாக இசை மட்டுமே உயர்ந்தது என இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன் பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். அன்று முதல் தற்போது வரை தமிழ் சினிமாவில் இசையா? மொழியா? என்ற விவாதம் தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனான மியூசிக் டைரக்டர் கார்த்திக் ராஜா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கார்த்திக் ராஜாவிடம் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛தற்போது தமிழ் சினிமாவில் ஒரு பிரச்சனை போய் கொண்டிருக்கிறது. இசை பெரியதா? மொழி பெரியதா? என்ற பிரச்சனையில் உங்களின் கருத்து என்ன?'' என கேட்டார்.
அதற்கு சிரித்த கார்த்திக் ராஜா, ‛‛மக்களுக்கு எது பிடிக்கிறதோ அதுதான் பெரியது. இது நான் சொல்லி தெரிய வேண்டியது அவசியம் இல்லை. ஒவ்வொருவருக்கும் மொழி முக்கியம். முக்கியம் என்பதை விட தமிழ் மொழி தான் சிறந்தது என்று நான் சொல்லுவேன். தமிழ் இசை என்பது தேவாரம் உள்ளிட்டவற்றில் இருந்து வந்தது. தமிழையும், இசையும் தனித்தனியே பிரித்து பார்த்தது கிடையாது. தமிழ், இசையை தனித்தனியாக பிரித்து தான் அனைவருக்கும் பிரச்சனை. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் பிரிவினை இருப்பதால் தான் பிரச்சனை.
தேவாரம் என்பது பாடல் வரியுடன் சேர்ந்து தான் வருகிறது. தமிழும், இசையும் வேறு வேறு இல்லை என்னை பொறுத்தவரை. தமிழர்களும், இசையும் வேறு இல்லை. இளைய நிலா என்ற பாடல் பாடினாலும், ஒரு குத்து பாடல் பாடினாலும் கூட மனதிலும், இதயத்திலும் நிற்கிறது. இசை ஒரு யுனிவர்ஸ்னா.. அதுல எவரெஸ்ட் எங்க அப்பா'' என்றார்.












Click it and Unblock the Notifications