உதவிகள் வழங்க ஒன்றிணைவோம்.. சிக்கிம் வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் கவலை!
சென்னை: சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தால் துயரில் ஆழ்ந்துள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று சிக்கிம். இந்த மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள லோனாக் ஏரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு மேக வெடிப்பு ஏற்பட்டது. கனமழை கொட்டி தீர்த்ததன் காரணமாக அங்குள்ள டீஸ்டா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தால் தலைநகரான காங்டாக், மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலாப்பயணிகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், டீஸ்டா நதியையொட்டிய டிக்சு, சிங்டாம், ராங்போ உள்ளிட்ட பல நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சிக்கிம் மாநிலத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. இதனால், கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
ஆறுகளையொட்டி வசிப்பவர்கள் உஷாராகாத நிலையில் இருந்ததால் பெரும்பாலானோர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். திடீர் வெள்ளத்தில் 22 ராணுவ வீரர்கள் உட்பட 102 பேரைக் காணவில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது. 11-க்கும் மேற்பட்ட பாலங்கள் சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தில் அடித்து செல்லப்படதில் மாயமான ராணுவ வீரர்களில் ஒரு வீரர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சரோஜ் குமார் தாஸ் என்ற அந்த வீரர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். திடீர் வெள்ளத்தால் மாயமான நூற்றுக்கணக்கானோரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், சிக்கிம் வெள்ள பாதிப்பு குறித்து தனது கவலையை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தால் துயரில் ஆழ்ந்துள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாயமான நமது தீரமிகு ராணுவ வீரர்கள் மற்றும் பலரது நிலையை நினைத்துக் கவலை அடைகிறேன். பாதிக்கப்பட்டுள்ளோருக்குத் தேவையான உதவியையும் ஆதரவையும் வழங்கிட ஒன்றிணைந்திடுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications