இதுக்கு ஒரு என்ட்கார்டே இல்லையா.. விஜயலட்சுமி விவகாரத்தில் நாளை சீமான் போலீஸ் விசாரணைக்கு ஆஜர்?
சென்னை: நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சென்னை போலீசார் முன்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக இருப்பதாக அவரது வழக்கறிஞர் தரப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சீமானுடன் திரைப்படத்தில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. 2008-ம் ஆண்டு சீமான் தம்மை திருமணம் செய்து கொண்டு 3 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்தோம்; பின்னர் ஏமாற்றிவிட்டார் என 2011-ல் நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தார். அப்போது பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் திடீரென விஜயலட்சுமி தமது புகாரை திரும்பப் பெற்றதால் ஓய்ந்தது.

12 ஆண்டுக்கு பின் புகார்: ஆனால் சீமான் மீது பல்வேறு புகார்களை தொடர்ந்து வீடியோ பதிவுகளில் முன்வைத்து வந்தார் விஜயலட்சுமி. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆண்டுகளுக்கு முன் சொன்ன அதே புகாரை தூசு தட்டி நடவடிக்கை எடுக்க கோரி சென்னை போலீசில் விஜயலட்சுமி புதிய புகார் கொடுத்தார். இதற்கு தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் வீரலட்சுமி ஆதரவாக இருந்தார்.
போலீஸ் விறுவிறு விசாரணை: சென்னை போலீசாரும் விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்து மருத்துவ பரிசோதனை நடத்தியது. பின்னர் சீமானை விசாரணைக்கு அழைத்து 2 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் சீமான் தரப்போ 2011-ல் முடித்துவைக்கப்பட்ட வழக்கை தூசு தட்ட என்ன காரணம்? நீதிமன்றம் ஒப்புதல் தந்துள்ளதா? என வழக்கறிஞர்கள் மூலம் கேள்வி கேட்டிருந்தார்.
விளாசிய சீமான்: மேலும் சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த சீமான், விஜயலட்சுமி -வீரலட்சுமி இருவரையும் ஏக வசனத்தில் விளாசி இருந்தார். கட்சி எல்லாம் பார்க்கமாட்டேன். வீரலட்சுமியை வெட்டிப் போட்டுவேன்; நான் கேடு கெட்ட ரவுடி என்றெல்லாம் பகிரங்கமாக பிரஸ் மீட்டிலேயே எச்சரித்தார் சீமான்.
விஜயலட்சுமி திடீர் வாபஸ்: இதனிடையே புதிய திருப்பமாக நள்ளிரவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையம் சென்ற நடிகை விஜயலட்சுமி, சீமானை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சென்னை போலீசார் மிகவும் தாமதமாக நடவடிக்கை எடுக்கின்றனர். நான் என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். சீமான் பவர்புல் மனிதர். சீமானை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பதால் என்னுடைய புகாரை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என அதிரடியாக பல்டி அடித்தார். அத்துடன் தாம் பெங்களூர் செல்வதாகவும் அறிவித்துவிட்டு விஜயலட்சுமி புறப்பட்டுப் போய்விட்டார்.
வீரலட்சுமி -நாம் தமிழர் மோதல்: இன்னொரு பக்கம், வீரலட்சுமிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இப்போது மோதல் ஏற்பட்டுள்ளது. சீமான் வட தமிழ்நாட்டுக்குள் கால் வைக்கவே முடியாது; ஒரு சீட்டு கூட அடிக்க முடியாது என்கிறார் வீரலட்சுமி. வடதமிழ்நாட்டில் 10,15 பொதுக்கூட்டம் நடக்கப் போகிறது.. முடிந்ததை செய்யலாம் என்கிறார் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன்.
சீமான் நாளை ஆஜர்: இந்த தொடர் கதையின் அடுத்த அத்தியாயமாக, விஜயலட்சுமி விவகாரத்தில் சென்னை போலீசில் நாளை சீமான் ஆஜராக இருக்கிறார் என அவரது வழக்கறிஞர்கள் தரப்பினர் ஊடகங்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சென்னை போலீசில் ஆஜராகும் சீமான், விஜயலட்சுமி தம் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுவிட்டதை சுட்டிக்காட்டுவார் என தெரிகிறது.
யப்பா.. இதுக்கு ஒரு என்ட் கார்டே இல்லையா?












Click it and Unblock the Notifications