பொங்கலுக்கு இலவச அரிசி, சர்க்கரை அரசு கொடுப்பது தேசிய அவமானம்.. சொன்னது சீமான்
சென்னை: பொங்கலுக்கு இலவச அரிசி, சர்க்கரையை அரசு கொடுப்பது தேசிய அவமானமாக கருதுகிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை கொண்ட பரிசுத் தொகுப்பை வழங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழர்களின் தேசிய இன விழாவாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில், பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. 2008-ல் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை உள்ளடக்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை மறைந்த முதல்வராக இருந்த கருணாநிதி நடைமுறைப்படுத்தினார். 2011-ல் தொடங்கிய அதிமுக ஆட்சிக் காலத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் நிதி உதவி வழங்கப்பட்டது. முதலில் ரூ100, பின்னர் ரூ500 என உயர்த்தப்பட்டு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது ரூ2,500 வரை வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தேர்தலில் வென்று திமுக ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சிக் காலத்தில் பொஙக்ல் பரிசுத் தொகுப்பு என்பது 21 பொருட்களைக் கொண்டதாக இருந்தது. ஆனால் நிதி உதவி வழங்கப்படாமல் இருந்தது. இது திமுக அரசு மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. அத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பில் இருந்த பொருட்களின் தரத்தை முன்வைத்தும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இந்தப் பின்னணியில் பொங்கல் பரிசுத் தொகையுடன் ரொக்கம் வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், 2023-ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் தைப் பொங்கலை முன்னிட்டு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர். இதன் மூலம் அரசுக்கு ரூ.2,356.67 கோடி செலவு ஏற்படும். பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வை ஜனவரி 2-ம் தேதி சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும், அன்றே மாவட்டங்களில் அமைச்சர்கள் பொங்கல் பரிசு விநியோகத்தை தொடங்கிவைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை என எதிர்க்கட்சிகளான அதிமுக, பாமக உள்ளிட்டவை ஆளும் திமுக அரசை விமர்சித்து வருகின்றன. சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பொங்கல் ஒரு தேசிய இனப் பண்டிகை. இந்த பண்டிக்கைக்கு ஒரு முழ கரும்பு கூட வாங்க முடியாத அளவுக்கு என்ன உழைத்திருக்கிறான் தமிழன்? தன்னுடைய தேசிய இனப் பண்டிகைக்கு அரசு கொடுக்கிற இலவசத்தை வைத்தா கொண்டாடுவது? பொங்கலுக்கு அரசு இலவச அரிசி, இலவச சர்க்கரை வழங்குவது தேசிய இனத்துக்கு அவமானம். பொங்கலுக்கு ரேஷனில் கரும்பு தரவேண்டும் என்பதையெல்லாம் ஏற்க முடியாது. ஒரு முழு கரும்பை தரவில்லை என்பதால் என்னதான் ஆகிவிடும் என்றார் சீமான்.












Click it and Unblock the Notifications