தென் மாவட்ட பயணிகளுக்கு குட் நியூஸ்! வந்தே பாரத் ஸ்பெஷல் ரயில் நீட்டிப்பு.. சொந்த ஊர் ஈசியா போகலாம்
சென்னை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா செல்வதற்கும் சொந்த ஊர் செல்வதற்கும் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்கிறார்கள். இதனால், ரயில், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் வைத்திருப்பவர்கள் கூட ரிசர்வ் பெட்டிக்குள் ஏறி பயணிப்பதாக அவ்வப்போது பயணிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

240 சிறப்பு ரயில்கள்: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து, பயணிகளின் நெரிசலை குறைக்கும் விதமாக, சிறப்பு ரயில்கள் இயக்குவது, விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைப்பது போன்ற நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது.
கோடை கால விடுமுறையையொட்டி, தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் 240 சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியது. இந்த நிலையில் தான் சென்னை - நாகர் கோவில் இடையேயான வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே கூறியிருப்பதாவது:-
எழும்பூர்- நாகர்கோவில்: வண்டி எண் (06067) சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையேயான வாரந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில் 02. 05. 2024 முதல் 27. 06. 2024 வரை நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கத்திலும் வண்டி எண் (06068) வந்தே பாரத் ரயில்கள் இதே காலம் வரை இயக்கப்படும். 9 சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் வியாழக்கிழமைகளில் மட்டும் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும்.
சேவை நீட்டிப்பு: அதேபோல், வார இறுதி நாட்களிலும் சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06057) சேவையும் 03. 05. 2024 முதல் 30. 06. 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படும். மறுமார்க்கத்திலும் இந்த ரயில் இயக்கப்படும். அதேவேளையில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு மேற்கூறிய நாட்களில் இயக்கப்படும்.
நின்று செல்லும் இடங்கள்: சென்னை எழும்பூரில் காலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல்,மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக நாகர் கோவிலுக்கு பிற்பகல் 2.15 மணிக்கு சென்று சேரும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து 2.50 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு 11.45 மணிக்கு வந்து சேரும்.
கோடை காலத்தில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. வெயில் வாட்டி வதைக்கும் நேரத்தில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பகல் நேரத்தில் இயக்கப்படும் இந்த ரயில் வசதியாக இருக்கும் என்று பயணிகள் கூறும் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications