“பாஜக குடும்ப கட்சி இல்லை” - தனது மகனுக்கு பதவி வழங்கப்பட்டது குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்
சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் மகனுக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கமளித்திருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாஜக குடும்ப கட்சி கிடையாது, என்னுடைய குடும்ப கட்சி கிடையாது. கட்சியில் 300க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களும், 1300க்கும் அதிகமாக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கட்சியில் என்னுடைய பதவிக்காலமே 3 ஆண்டுகள்தான்.

ஒருவேளை கட்சியின் தேசிய தலைமை என்னுடைய பதவி காலத்தை நீட்டிக்க விரும்பினால், மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிப்பார்கள், அவ்வளவுதான். பாஜகவில் எல்லோருக்கும் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்தான். மட்டுமல்லாது நான் வருவதற்கு முன்னரே, என்னுடைய மகன் நயினார் பாலாஜி இளைஞரணியின் மாநில துணை தலைவராக இருந்திருக்கிறார். எனவே பாஜகவில் வாரிசு அரசியல் இப்போது மட்டுமல்ல, எப்போதும் கிடையாது" என்று கூறியிருக்கிறார்.
நேற்று பாஜகவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு, அரசு தொடர்பு மற்றும் மத்திய நலத்திட்டங்கள் பிரிவு, தேசிய மொழிகள் பிரிவு, விருந்தோம்பல் பிரிவு, ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு என மொத்தம் 25 பிரிவுகளுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
அதில், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் பொறுப்பாளராக நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி நியமிக்கப்பட்டிருந்தார். தமிழகத்தில் திமுகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று பணியாற்றி வரும் பாஜக, திமுக மீது வைக்கும் முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்றுதான் வாரிசு அரசியல். ஆனால் தமிழக பாஜக தலைவரின் மகனுக்கு கட்சிக்குகள் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது வாரிசு அரசியல் விமர்சனத்தின் தீவிரத்தை குறைப்பாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதேபோல இந்த பொறுப்புகள் நியமனத்திற்கு பாஜகவின் இதர பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். குறிப்பாக ஆலிஷா அப்துல்லா அதிருப்தி தெரிவித்திருந்தார்.
தனது x பக்கத்தில், "நான் பாஜகவில் பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலைக்காக மட்டுமே இணைந்தேன். ஏனென்றால், அவர்களின் பார்வை மிகவும் தெளிவாக உள்ளது. மதம் இல்லை! சாதி இல்லை! வெறும் கடின உழைப்பு மட்டுமே என்பதை அவர்கள் வலியுறுத்தினார்கள். இந்தியாவின் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருப்பதால், மேற்குறிப்பிட்ட விஷயத்தில் கட்சி முரண்பட்டிருப்பதை காண்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
நான் இந்த கட்சிக்கு 3 ஆண்டுகள் இரவு பகலாக மிகவும் கடினமாக உழைத்தேன்! ஆனால் துரதிர்ஷ்டவசமாக, 12 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் கேசவன் விநாயகம் எந்த நல்ல காரியமும் செய்யவில்லை. நான் எனது வேலையைக் நிரூபிக்க அவரை அணுகியபோது, அவர் என்னை அவமானப்படுத்திவிட்டு நடந்து சென்றுவிட்டார்! இது முஸ்லிம்களுக்கு இங்கு இடமில்லை என்பதை நிரூபிக்கிறது. எனது அனைத்து கடின உழைப்பும் வீணாகிப் போனது வருத்தமாக உள்ளது! 25 தலைவர்களில் கிறிஸ்தவர்களோ அல்லது முஸ்லிம்களோ இல்லை" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications