ரஜினிகாந்த் ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டாங்க.. ஆதவ் அர்ஜுனா உடனே மன்னிப்பு கேட்கனும்.. நயினார் டென்ஷன்
சென்னை: அரசியலில் சிஸ்டத்தை மாற்ற நினைத்த ரஜினிகாந்தை திமுக தடுத்து நிறுத்தியதாகவும், விஜய் யார் மிரட்டலுக்கும் பயப்படாதவர் என்றும் ஆதவ் அர்ஜுனா கூறியிருந்த நிலையில் அவருக்கு ரஜினி ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் பற்றி பேசிய ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனநாயக திருவிழா தொடங்கி இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அரசியல் கட்சியினரும் சூடுபறக்க பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

ரஜினிகாந்த் பற்றி ஆதவ் அர்ஜுனா பேச்சு
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் சென்னையில் சாதி வாரிகணக்கெடுப்பை நடத்தக்கோரி தவெக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ரஜினிகாந்த் குறித்து பேசிய பேச்சுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆதவ் கூறுகையில், "தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு ஒரு பிரபலமான தலைவராக வர வேண்டும் என ரஜினிகாந்த் நினைத்தார். அரசியலில் சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என நினைத்தார். எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என நினைத்தார். ஆனால் இதே திமுக குடும்பம் பல மிரட்டல்களை கொடுத்து அவரை அரசியலுக்கு வராமல் பார்த்துக்கொண்டனர். இன்றைக்கு அவருடைய நிலைமை என்ன?
விஜய் கிட்ட மனவலிமை இருக்கு
கடைசியில் அவர்கள் குடும்பத்தினர் தயாரிக்கும் படங்களிலேயே நடிக்க போய் விட்டார். அவர் மேல் தனிப்பட்ட விமர்சனம் கிடையாது. ஆனால், அரசியலில் அந்த மனவலிமை நம்ம விஜய் கிட்ட தான் இருக்கு என்பதை இங்கே பதிவு செய்துகொள்கிறேன்.. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்க. எங்க தலைவர் மக்களுக்காக தொடர்ந்து செய்வார்" என்று பேசினார்.
ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கியது. ரஜினிகாந்த் அவர்கள் மிரட்டல்களுக்கு அஞ்சுபவர் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.. கூட்டம் சேர்ப்பவர்கள் எல்லாம் தலைவர்கள் கிடையாது.. பழிக்கவும் ரஜினி.. பிழைக்கவும் ரஜினியா என ஆவேசமாக பதில் அளித்து இருந்தனர். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும், ரஜினிகாந்த் குறித்து பேசிய ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆதவ் அர்ஜுனாவிற்கு கண்டனம்
நயினார் கூறியிருப்பதாவது:- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பும் ஆதவ் அர்ஜுனாவிற்கு கண்டனம்! திரைப்படத் துறையில் 50 ஆண்டுகளாகக் கோலோச்சிவரும் சிறந்த கலைஞர், உலகளவில் தமிழ்த் திரைப்படத்தின் முகமாகத் திகழ்பவர்.
தாதா சாகேப் பால்கே விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற பல முக்கிய விருதுகளைப் பெற்று திரைத்துறையின் இமையத்தைத் தொட்டவர், சிறந்த ஆன்மிகவாதி எனப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மேலும் அனைத்து மூத்த தலைவர்களின் அன்பையும், பிரதமர் மோடியிடம் மரியாதையையும் பெற்றவராகத் திகழ்பவர். ஜாதி, மதம், மொழியைக் கடந்து அனைத்துத்தரப்பட்ட மக்களின் பேரன்பைப் பெற்றவர்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
அத்தகைய சிறந்த பண்பாளரைக் குறித்து தவெகவைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் தவறாகப் பேசுவது என்றும் ஏற்புடையதல்ல! அதைப் பார்த்துக் கொண்டு சூப்பர் ஸ்டார் அவர்களின் ரசிகர்களும் சும்மா இருக்க மாட்டார்கள்! பத்திரிகைகளின் கவனத்தைப் பெறுவதற்காக, தமிழக மக்களின் பேரன்பிற்குச் சொந்தக்காரரான ரஜினிகாந்த் அவர்கள் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியதை அக்கட்சியின் தலைவர் கண்டிக்க விரும்புகிறேன்.
இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்ற அறிவுரையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் ரசிகர்களிடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications