ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ 4 கோடி என்னுடையது அல்ல என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் அனைத்து லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கும் வரை அந்தந்த தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் ரூ 50 ஆயிரத்திற்கு மேல் கணக்கில் வராமல் எந்த ஆவணங்களும் இன்றி பணத்தை கொண்டு செல்லக் கூடாது.

மீறி கொண்டு சென்றால் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும். இது வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதை தடுப்பதற்காக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அது போல் பரிசு பொருட்கள், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை கூட மொத்தமாக எந்த ஆவணங்களும் இன்றி வைத்திருக்கக் கூடாது.
இந்த நிலையில் கடந்த 6-ஆம் தேதி இரவு, அதாவது தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிவதற்கு முன்பு சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது அந்த ரயிலில் 3 பேர் 3.99 கோடி ரூபாயை உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் புரசைவாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணியாற்றும் சதீஷ், நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் என தெரியவந்தது. அவர்கள் நெல்லை லோக்சபா தொகுதியின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. மேலும் அதோடு நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோர்தான் பணத்தை தந்து நெல்லைக்கு கொண்டு செல்லும்படி கூறியதாகவும் தெரிவித்துள்னர்.
இதையடுத்து போலீசார் முருகன், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று முன் தினம் முருகனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது முருகன் போலீஸாரிடம், ‛‛நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் என்னை தொடர்பு கொண்டு பணம் அனுப்பி வைக்கப்படுவதை மட்டுமே கூறினார்'' என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் தாம்பரம் போலீஸார் நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் மே மாதம் 2-ம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த சம்மனை நேரில் வழங்க தாம்பரம் காவலர் ஒருவர் திருநெல்வேலி புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இதுகுறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியிருப்பதாவது: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ 4 கோடி என்னுடைய பணம் இல்லை.
அந்த ரூ 4 கோடிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. மே 2ஆம் தேதி நான் தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்கவுள்ளேன் என நயினார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் கடந்த 22ம் தேதி (தேர்தலுக்கு பிறகு) ஆஜராகி விளக்கம் அளிக்க நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் நயினார் நாகேந்திரன் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் ஆஜராகி நயினார் நாகேந்திரன் ஆஜராக 10 நாட்கள் அனுமதி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதை ஏற்று தான் தற்போது நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கு மே 2-ம் தேதி ஆஜராகக் கோரி தாம்பரம் போலீஸார் சம்மன் வழங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications