ரூ.100 கோடி நிலம் அபகரிப்பா? அறப்போர் இயக்கத்தின் புகாருக்கு நயினார் நாகேந்திரன் தரப்பு விளக்கம்
சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி 1.3 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்கான கிரைய ஒப்பந்தம் போட்டோம் என்று நயினார் நாகேந்திரன் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அறப்போர் இயக்கம் மீதும் அதன்பின்னணியில் இருப்பவர்கள் மீதும் அவதூறு வழக்குத் தொடருவோம் என்று நயினார் நாகேந்திரனின் மகன் கூறினார்.
நெல்லை தொகுதி எம்எல்ஏவும்பாஜகவின் முக்கியமான தலைவர்களில் ஒருவரமான நயினார் நாகேந்திரன் மீது அறப்போர் இயக்கம் நில அபகரிப்பு புகார் கூறியது.

அறப்போர் இயக்கம் டுவிட்டரில் வெளியிட்டிருந்த பதிவில், "சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலம் உள்ளது. அதில் இளையராஜா என்பவரிடம் இருந்து , 1.3 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்காக நயினார் நாகேந்திரன், அவரது மகன் நயினார் பாலாஜி ஆகியோர் கிரைய ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.
100 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் சென்னையில் போடப்படாமல் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சப்-ரெஜிஸ்டர் அலுவலகத்தில் நடந்துள்ளது. அந்த நிலத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கையகப்படுத்தி இருக்கிறது என்பதைக் கூட கவனத்தில் கொள்ளாமல் ஒப்பந்தம் போட்ட இளையராஜா மற்றும் நயினார் நாகேந்திரன், அவரது மகன் நயினார் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கூறியிருந்தது.
இந்நிலையில் நயினார நாகேந்திரன் மகனும், பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவருமான நயினார் பாலாஜி இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில், அந்த நிலம் நாராயணன் கிராமிணி என்பருக்குச் சொந்தமானது. அவர் குலாப்தாஸ் என்பவரிடம் கடன் பெற்றதற்காக 1931-ல் நீதிமன்றத்தின் மூலம் கிரையப் பத்திரம் செய்து கொடுத்துள்ளார்.
குலாப்தாஸின் பேரனான நாராயணன் ஓரா என்பவர் மும்பை நீதிமன்றத்தில் வாரிசு சான்று பெற்றிருக்கிறார். அதை எல்லாம் சரிபார்த்த பின்னர் இளையராஜா என்பவர் விற்பனைக்கான உரிமம் பெற்றிருக்கிறார். இதற்கிடையே அந்த நிலம் தொடர்பாக சிலர் போலியான பத்திரங்களை பதிவு செய்துள்ளனர்.
அது தொடர்பான வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. விற்பனை உரிமம் வைத்துள்ள இளையராஜாவிடம் இருந்து நாங்கள் அந்த நிலத்தை வாங்குவதற்காக, நிலத்தின் உண்மையான மதிப்பான ரூ.46 கோடியில் இரண்டரை கோடி ரூபாயை அட்வான்ஸாக கொடுத்து பத்திரம் பதிவு செய்திருக்கிறோம்.

அந்த நிலத்துக்காக பதிவு செய்ததில் எந்தவித விதிமுறை மீறலும் கிடையாது. 2022ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி நாங்கள் நிலத்தை பதிவு செய்திருக்கிறோம். ஆனாலும் அந்த நிலத்துக்கான மதிப்பு, பட்டா உள்ளிட்டவற்றை சரிபார்த்த சென்னை சார்-பதிவாளர் அலுவலக அதிகாரிகள் ஒப்புதல் அளித்த பிறகே ராதாபுரம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் இருந்து எங்களுடைய ஒப்பந்தப் பத்திரத்தைக் கொடுத்தார்கள்.
ஆனால், பத்திரப் பதிவு விதி 28-ன் கீழ் வேறு இடத்தில் பத்திரம் பதிவு செய்யக் கூடாது என்பதற்கான நடைமுறை ஜூன் 29-ம் தேதி நடந்தது. அதற்கு முன்பாகவே நாங்கள் பத்திரம் பதிவு செய்துள்ளோம். அதனால் எந்த விதிமீறலும் நடக்கவில்லை. ஆனால் இந்த நிலத்துக்கு உரிமை கொண்டாடும் யாருக்கோ ஆதரவாகவோ அல்லது நிலத்தை வாங்க முயன்ற யாரோ சிலருக்காக அறப்போர் இயக்கத்தினர் எங்கள் மீது பொய்யான புகாரை கூறியிருக்கிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் மீது அவதூறு பரப்பப்படுவதாக சந்தேகிக்கிறோம். என் தந்தை நயினார் நாகேந்திரன் மீது மக்களிடம் இருக்கும் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்தில் செயல்படும் அறப்போர் இயக்கம் மீதும் அதன்பின்னணியில் இருப்பவர்கள் மீதும் அவதூறு வழக்குத் தொடருவோம் என்று நயினார் பாலாஜி கூறினார்.












Click it and Unblock the Notifications