நயினார் நாகேந்திரன்.. கருணாநிதியை சொன்னதுமே.. டக்குனு எழுந்த ஸ்டாலின்.. அப்படியே பார்த்த சட்டப்பேரவை
சென்னை: துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கே அதிகாரம் இருக்கிறது என்கிறது அரசியல் சாசனம் என்று, எம்எல்ஏவும், தமிழக பாஜக மூத்த தலைவருமான நயினார் நாகேந்திரன் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் திருப்பியினுப்பிருந்த 10 சட்ட மசோதாக்களையும், மீண்டும் 2-வது முறையாக சட்டசபையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை: இதற்காகவே, சிறப்பு சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.. இன்று சட்டசபையில் நிறைவேற்றப்படும் 10 மசோதாக்களும் சட்டசபை கூட்டம் முடிந்ததும் சட்டசபை செயலகம் மூலம் தமிழக அரசின் சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு உடனே அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என தெரிகிறது.
ஆளுநருக்கு எதிராக உள்ளதால், இன்றைய சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிக்க பாஜக முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. அதுமட்டுமல்ல, இந்த கூட்டத்தில் பங்கேற்க போவது இல்லை என்று சட்டப்பேரவைத் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், சட்டப்பேரவை நிகழ்வில் நிச்சயம் பங்கேற்போம் என்று பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதி தந்திருந்தார்
சபாநாயகர்: அதன்படியே, இன்று பாஜக எம்எல்ஏக்கள் பேரவை கூட்டத்தில் இன்றைய தினம் பங்கேற்றிருந்தனர். பேரவையில் நயினார் நாகேந்திரன் பேசும்போது சொன்னதாவது:
"சபாநாயகர் அவர்களே, நீங்கள் இந்த சபை ஆரம்பிக்கும்போதே, மத்திய அரசையோ, ஆளுநரையோ குறைத்து பேசக்கூடாது என்றீர்கள்.. ஆளுநரை பற்றியே பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு, அவருக்கு எதிராகவே இங்கு பேசுபவர்களை பேசவிட்டுவிட்டு, நீங்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். சிறுபிள்ளைத்தனமாக ஆளுநர் பேசி வருகிறார் என்றெல்லாம் இங்கிருப்பவர்கள் பேசுகிறார்கள்.. தீர்மானங்கள் என்பது வேறு.. அவைகளை ஆதரிப்பதா? எதிர்ப்பதா என்பது வேறு விஷயம்?
கலைஞர் கருணாநிதி: இந்த சட்டமன்றம் ஒரு மாண்பும், மரபும் மிக்கது. இதை பொதுக்கூட்டமாக மாற்றிவிடக்கூடாது என்பதே என்னுடைய கோரிக்கை.. இங்கு முதல்வர் பேசியிருந்தார். ஒவ்வொரு வார்த்தைகளும் மிகவும் நிதானமாக பேசினார். ஆனால், இங்கு பலரும் அப்படியில்லை.. ஆளுநர் குறித்து நிதானமில்லாமல் பேசுகிறார்கள்..
கருத்து வேறுபாடு பல இருக்கலாம்.. ஆனால், வேந்தர்களை நியமனம் செய்வது என்பது, ஆளுநர்களுக்குத்தான் அதிகாரம் வேண்டும் என்று, இதே சபையில் கடந்த 1998-ல் கலைஞர் கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் இன்னைக்கு வேந்தர்களை முதலமைச்சரே நியமிக்க வேண்டும் என கோரி தீர்மானம் போட்டிருக்கிறோம். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது" என்று நயினார் இப்படி பேசிக்கொண்டிருந்தபோதே, திடீரென குறுக்கிட்டு எழுந்தார் முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் விளக்கம்: "ஆளுநர்கள், அப்போதெல்லாம் அரசுடன் பேசித்தான் துணைவேந்தர்களை நியமிப்பார்கள், வேந்தர்கள் தேர்வு செய்வது பற்றி அரசினுடைய பரிசீலனைக்கு கொண்டு வந்து கலந்து பேசி நியமனம் செய்வது தான் அப்போது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி அல்ல என்பதால் தான் நாங்கள் எதிர்கிறோம்" என்று முதல்வர் விளக்கமளித்தார்.
இதைக்கேட்ட நயினார் நாகேந்திரன் தொடர்ந்து பேசும்போது, "எமர்ஜென்சி காலக்கட்டத்தில் கல்வி மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதனால் தான் மத்திய அரசு கல்வி கொள்கைக்கு முன்னுரிமை தரப்படுகிறது.. அந்த வகையில் பட்டியலிலிருக்கும், உயர்கல்வி நுழைவுத்தேர்வுகள், வேந்தர்கள் நியமனம் என அனைத்துமே மத்திய அரசு வசமே உள்ளது. அதனை மாற்ற முதல்வர் ஸ்டாலின் முனைந்திருக்கிறார்.
பாஜக வேண்டுகோள்: வேந்தர் பதவி அரசியல் பதவியாக இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றமே சொல்கிறது.. இப்படியான சூழலில் ஆளுநரிடம் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்கள் எதற்கு திருப்பி அனுப்பப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து, அதற்கு தந்தாற்போல சட்டங்களை மாற்றி அமைத்து, நாம் அதை திருப்பி அனுப்ப வேண்டும் என்பதே பாஜகவின் வேண்டுகோளாக இருக்கிறது. இந்த அரசாங்கம் கூர்மையான போக்கு கடைப்பிடிக்க வேண்டும்" என்றார் நயினார் நாகேந்திரன். எ
மசோதாக்கள்: முன்னதாக, மீண்டும் திருப்பி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் தாமதம் செய்யாமல், உடனடியாக ஒப்புதல் தரவேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டும் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதுடன், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் முன்பே மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தர வேண்டும் என்ற "வார்த்தையையும்" சுப்ரீட் கோர்ட் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.
ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கும் நிலையில், இன்றைய மசோதாக்களும் ஒப்புதல் தந்தாக வேண்டிய சூழல், இன்று ஆளுநர் மாளிகைக்கு ஏற்பட்டிருப்பதாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications