நல்லகண்ணு மறைவு.. சிபிஐ அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சென்னை: சிபிஎம் மாநில அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தி இருக்கிறார். பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள், அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக இருந்தவர் நல்லகண்ணு என்று கூறிய ஸ்டாலின், அவரது மறைவால் வாடும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், இன்று பிற்பகல் 1.55 மணிக்கு உயிரிழந்தார். நல்லகண்ணுவின் மறைவு தமிழ்நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையடுத்து சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு அத்தனை கட்சிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு, இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம் என்று தெரிவித்தார். தற்போது நல்லகண்ணுவின் உடல் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சிபிஐ அலுவலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், நல்லகண்ணு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், நல்லகண்ணு மறைவு பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு மிகவும் வருத்தப்படக் கூடிய ஒன்றாகும்.
அதேபோல் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கும், அரசியலில் ஈடுபடுவோருக்கும் ஒரு பாடமாக வாழ்ந்தவர் தோழர் நல்லகண்ணு என்று தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து திமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் நல்லகண்ணு உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications