நல்லகண்ணு இயற்கையோடு போராடி வருகிறார்.. தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.. வீரபாண்டியன்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். நல்லகண்ணு உடல்நிலை குறித்து பரவும் தகவலில் உண்மையில்லை. மருத்துவமனை அறிக்கை வரும் வரை காத்திருங்கள் என்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவனையில் வீரபாண்டியன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே இருந்து வந்தார். வீட்டில் தவறி விழுந்ததில் அவர் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நல்லகண்ணு உடல்நிலை
அங்கு அவருக்கு நுரையீரல் பிரச்சனை காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் வீடு திரும்பினார். இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து 20 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் அவருக்கு உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார் என்றும், செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் தகவல் வெளியானது. தமிழக முதல்வர் ஸ்டாலினும் நேரில் சென்று மருத்துவர்களிடம் நல்லகண்ணு உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
வீரபாண்டியன் பேட்டி
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் வீரபாண்டியன், நல்லகண்ணு உடல்நிலை குறித்து வதந்தி பரப்ப வேண்டாம் என்றும், நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். வீரபாண்டியன் கூறியதாவது:-
ஆர் நல்லகண்ணு குறித்த மருத்துவமனை அறிக்கை வெளியான பிறகு அதிகாரப்பூர்வமாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவிக்கும். அதுவரை எத்தகைய தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். தமிழ் உலக மக்கள் அவர் மீது கொண்டுள்ள அன்பு மிகப்பெரியது. எனினும் இது மருத்துவம் சம்பந்தப்பட்டது. உயிர் சம்பந்தப்பட்டது.
மருத்துவமனை அறிக்கை வரும் வரை
மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ அறிக்கை வரும் வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சி காத்திருக்கும். இந்திய கம்யூனிஸ்டு கட்சி பகிரும் வரை தமிழ் கூறும் நன்மக்கள் காத்திருக்கும் என நம்புகிறோம். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றாலும், அதனை அறிவிப்பது மருத்துவமனை..
கட்சி என்கிற வரையில் நல்லகண்ணு தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். மருத்துவமனையில் போராடி வருகிறார். கட்சியின் பெரிய தலைவர்.. அதே சிகிச்சை பிரிவில் முன் பின் முகம் தெரியாத ஏழை, எளிய மக்களும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்..
நல்லகண்ணுக்கு எந்த அளவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை கொடுக்கிறார்களோ அதே அளவுக்கு அந்த எளிய மக்களின் உயிரை காக்கவும் மருத்துவர்கள் போராடுகிறார்கள். இந்தியாவில் இதுபோல் ஒரு மருத்துவமனை இல்லை.. இதுபோன்ற மருத்துவர்களும் இல்லை என்பதை இந்நேரம் நான் சொல்லிக்கொள்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications