ஒரே ஒரு வார்த்தை... ஹீரோவான சின்னதுரை! ஐஏஎஸ் அதிகாரி உருக்கமான பதிவு!
சென்னை: மாணவன் சின்னதுரை சொன்ன வார்த்தை ஒன்று சமூக ஊடகங்களில் பலரது பாராட்டைப் பெற்று வருகின்றது.
சமூக ஊடகங்களில் இன்றைக்கு மாணவர் சின்னதுரைதான் ஹீரோ. +2 தேர்வில் அவர் 469 மதிப்பெண் எடுத்திருந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சின்னதுரையை, அவருடன் படிக்கும் சாதிவெறி பிடித்த சக மாணவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி வீசினர். அந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மனிதநேயம் மிக்கவர்களின் மனசாட்சியைப் பிடித்து உலுக்கியது.
வீடு முழுக்க ரத்த வெள்ளமாகக் காட்சி அளித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் கடும் சலசலப்பை ஏற்படுத்தின. பலரும் இந்த மிருகத்தனமான தாக்குதல்களைக் கண்டித்திருந்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரையை நேரடியாகச் சந்தித்து உதவிகளை வழங்கி இருந்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ். தன்னுடைய சொந்த செலவில் படிக்க வைப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
அதன்பின்னர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சின்னதுரைக்கு ஆசிரியர்கள் அவரது இடத்திற்கே சென்று பாடம் நடத்தி வந்தனர். அவர் மருத்துவமனையிலிருந்தபடியே காலாண்டு தேர்வை எழுதி இருந்தார்.

இந்நிலையில்தான் நேற்று +2 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. அதில் அவர் 469 மதிப்பெண்களை எடுத்துச் சாதித்து இருந்தார்.
அதனையொட்டி அவரை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து தனது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தார். முதல்வரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த சின்னதுரை மிக அமைதியாகக் கேள்விகளை எதிர்கொண்டார்.
தன்னை தாக்கியவர்கள் பற்றிய கேள்விக்கு அவர்,"அவர்களும் என்னைப் போன்று நன்றாகப் படித்து முன்னேற வேண்டும்" என்று சொன்ன வார்த்தைகள் சமூக ஊடகங்களில் வைரலாக மாறியது.
சின்னதுரையை வெட்டிய போது ஏன் ஓடவில்லை. அங்கிருந்து தப்பிக்க ஏன் முயற்சிக்கவில்லை என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், "என் தங்கை உடன் இருந்தாள். நான் ஓடி இருந்தால் அவளை வெட்டி இருப்பார்கள்" என்று சொன்ன வார்த்தைகள் பல குடும்பங்களில் உள்ள தாய்மார்களை உலுக்கிப் போட்டுள்ளது.

அதைக் குறிப்பிட்டு பலரும் ஃபேஸ்புக்கில் பதிவு போட்டு சின்னதுரையைக் கொண்டாட ஆரம்பித்தனர். நேற்றும் இன்றும் சமூக வலைத்தளங்களில் ஹீரோவாக மாறி உள்ளார் சின்னதுரை.
பல தடைகளைத்தாண்டி சிகரங்களில் ஏறி இருக்கிறார் சின்னதுரை.
மேலும் இவர் தனது எதிர்கால படிப்புகள் பற்றிப் பேசுகையில், பிகாம் படித்துவிட்டு அதன்பின்னர் சிஏ படிக்க விரும்புவதாகச் சொல்லி இருந்தார். ஆடிட்டர் ஆகவேண்டும் என்பதுதான் என் கனவு என்றும் சின்னதுரை கூறியிருந்தார்.
இதைத்தண்டி "சாதி பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது. 'நீ என்ன படிக்க நினைக்கிறாயோ, அதைப் படி. நான் உனக்கு உதவி செய்கிறேன். என்ன செலவாகிறதோ அதை நானே தருகிறேன். நீ செலவைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்' என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னதாக" தெரிவித்தார்.
சின்னதுரை திருநெல்வேலியிலேயே படிக்கத் திட்டமிட்டுள்ளார். அவரது தாயைப் பிரிந்து வர முடியாது என்பதால் இந்த முடிவைத் தான் எடுத்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.
நெட்டிசன்கள் பலரும் சின்னதுரையை வாழ்த்தி வருகின்றனர். அதில் முக்கியமான ஒன்றை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் எழுதி உள்ளார்.

இவர் இப்போது ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஆலோசனை அதிகாரியாகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் நீண்ட ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பாலகிருஷ்ணன், "மருத்துவமனையிலிருந்துதான் காலாண்டு தேர்வை எழுதினார்.
உன்னை வெட்டிச் சாய்த்த வன்மம் அனைத்தையும் நன்னயம் செய்யும் ஒற்றைச் சொல்லால் நேர் செய்யும் இந்த மனசும் பக்குவமும் உனக்கு எப்படி வந்தது தம்பி?
நீ எவ்வளவு பெரிய ஆளானாலும் உன்னை "சின்னதுரை" என்றே அழைப்பார்கள். ஏனெனில் அது உனக்கு இடப்பட்ட இயற்பெயர்.
ஆனால் நீ நேற்றே "பெரிய துரை" ஆகிவிட்டாய்.
இடும்பைக்கு இடும்பை பயத்து நீ வாங்கிய மதிப்பெண் பற்றி நான் கூறவில்லை. உன் பேச்சால், நடத்தையால், இணக்கம் நாடும் உனது இனிய பண்பால் நீ அந்த மதிப்பெண்ணிற்குக் கூட்டிய " கூடுதல் மதிப்பு" பற்றிக் கூறுகிறேன்.
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எழுதிய புறநானூறு ( 183 ) எனக்கு நினைவுக்கு வருகிறது.
சமகால நிகழ்வுகளோடு சங்க இலக்கிய விழுமியங்களைப் பொருத்திப்பார்ப்பது என்மட்டில் தவிர்க்கவே முடியாத, நான் தவிர்க்கவும் விரும்பாத "தமிழ்ப்பண்பு" ஆகிவிட்டது. அது தானே சரி!
"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனந் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை திரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே."
ஆமாம்.
அறிவுடையான் ஆறு அரசும் செல்லும்.
மீண்டும் வாழ்த்துகிறேன் சின்னதுரை" என்று மிக உருக்கமாக எழுதி உள்ளார்.












Click it and Unblock the Notifications