சென்னை கலாஷேத்ரா மீதான பாலியல் புகார்.. கைவிட முடிவு செய்த தேசிய மகளிர் ஆணையம்.. டிஜிபி தகவல்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் கலாஷேத்ராவில் பாலியல் புகார்கள் எழுந்த நிலையில் அதனை அந்த நிர்வாகம் முற்றிலுமாக மறுத்தது. இருப்பினும் தானாக முன்வந்து விசாரித்த தேசிய மகளிர் ஆணையம் அதுபற்றிய புகாரை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உறுதி செய்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா பவுண்டேஷன் சார்பில் மத்திய கலாச்சார துறை அமைச்சகத்தின் நேரடி நிதி ஒதுக்கீட்டின் கீழ் கலாஷேத்ரா ருக்மணிதேவி கவின் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் தான் சென்னை கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் செய்திகளும் வெளியாகின. இதனை கலாஷேத்ரா நிர்வாகம் முற்றிலுமாக மறுத்தது.

தேசிய மகளிர் ஆணையம்
இது ஒருபுறம் இருக்க தேசிய மகளிர் ஆணையம் ஊடகங்களில் வந்த தகவல்களை கவனித்தது. அதனடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தை கையில் எடுத்தது. அதாவது சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு அறிவுறுத்தியது. இதுதொடர்பாக அந்த ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக ஆசிரியர் மீதும், குற்றம்சாட்டப்பட்டவர்களை காப்பாற்றும் கலாஷேத்ரா நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது'' என கூறியிருந்தது. இந்த ட்விட்டர் பதிவை கடந்த 23ம் தேதி தேசிய மகளிர் ஆணையம் செய்தது.

சைலேந்திர பாபு விளக்கம்
இதுபற்றி தற்போது தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛கலாஷேத்ரா மீதான பாலியல் புகாரில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இதனால் வழக்கு கைவிடப்பட உள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது என 2 புகார்கள் வந்துள்ளன '' என தெரிவித்துள்ளார். இதன்மூலம் கலாஷேத்ரா மீதான பாலியல் புகாரை தேசிய மகளிர் ஆணையம் கைவிடுவது உறுதியாகி உள்ளது.

புகார்கள் கொடுத்தது யார்?
மேலும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக கலாஷேத்ரா நிர்வாகம் மற்றும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவி போலீசில் புகார் செய்துள்ளார். அதில் கலாஷேத்ரா குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. எனது பெயரில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. இந்த புகார்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கலாஷேத்ரா விளக்கம்
இதற்கிடையே கலாஷேத்ரா பவுண்டேஷன் தலைவர் ராமதுரை சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‛‛பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார் பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அது அடிப்படை ஆதாரமற்றவை என தெரியவந்தது. மாறாக சமூக ஊடகங்களில் கூறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தானாகவே முன்வந்து விசாரணையை தொடங்கியது. அப்போது கல்லூரியின் குழு விரிவான விசாரணை நடத்தியது பற்றியும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி மத்திய காலாச்சார அமைச்சகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருவுக்கும் சிஷ்யருக்கும் இடையிலான உறவு புனிதமானது. இதனை நாங்கள் பாதுகாப்போம்'' என பாலியல் புகாரை முற்றிலுமாக மறுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications