தென்மேற்கு பருவமழை.. தயாரான பேரிடர் மீட்பு படை.. காவல்துறை டிஜிபி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் தென் மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை தயாராக இருப்பதாக காவல்துறை டிஜிபி அறிவித்துள்ளார். 5 குழுக்களாக 500 வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெப்பம் நடப்பு ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாட்டி வதைத்தது. தென் மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த 8-ந்தேதி தொடங்கினாலும் தமிழ்நாட்டில் வெப்பம் தணியாமல் இருந்தது. பகல் வேளைகளில் கடுமையான வெப்பமும் இரவில் புழுக்கமும் இருந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், வானிலை நேற்று திடீரென மாறத்தொடங்கியது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாகவும் அவ்வப்போது விட்டு விட்டு மழையும் என இதமான சூழல் நிலவியது. நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது. பகலிலும் விட்டு விட்டு கனமழை பெய்தது. சென்னை மட்டும் இன்றி வெளி மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கினாலும் சில மணி நேரங்களில் வழிந்தோடியது.
அவ்வப்போது விட்டு விட்டு தற்போது மிதமான மழையும் லேசான தூறலுமாக சென்னையில் காணப்படுகிறது. தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை முதல் வருகிற 23-ந்தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருப்பதாக காவல்துறை டிஜிபி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "மொத்தம் 500 வீரர்கள் மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறார்கள். ஒரு குழுவில் 100 பேர் வீதம் 5 குழுக்களில் மொத்தம் 500 பேர் மழை வெள்ள மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதில் 2 குழுக்கள் சென்னையில் மழை வெள்ள மீட்பு பணியில் ஈடுபடவும், மீதமுள்ள 3 குழுக்கள் நீலகிரி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் மீட்பு பணியில் ஈடுபடும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications