தேசிய இளைஞர் தினம் இன்று! விவேகானந்தரின் வாழ்வில் ஸ்ரீராமபிரான் நிகழ்த்திய அற்புதம்
விவேகானந்தரின் பிறந்தநாள் தேசிய இளைஞர் தினமாக இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை: சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் எத்தனையே அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. மகாவிஷ்ணுவின் அவதாரமாக ஸ்ரீராமபிரான் மூலம் மிகப்பெரிய உதவி ஒன்று விவேகானந்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளது. பசியோடு இருந்த விவேகானந்தருக்கு ராமபிரான் தனது பக்தர் ஒருவரின் மூலம் உணவளித்த அதிசய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இந்த பாரத பூமியில் எத்தனையோ அவதார புருஷர்களும், ஆன்மீக சான்றோர்களும் தோன்றி, மக்களுக்கு நன்னெறிகளை அறிவுறுத்தி அவர்களை நல்வழிப்படுத்த தங்களின் வாழ்வை அர்பணித்தித்திருக்கிறார்கள். அவர்களில் சுவாமி விவேகானந்தர் மிக முக்கியமானவர். அவருக்கு இந்த தேசத்தில் தனித்துவமான இடம் உண்டு.

இந்த மகான் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் பேசும் வரையிலும், மற்ற உலக நாடுகளிடையே நம் பாரத தேசத்தைப் பற்றிய அபிப்பிராயம் வேறு மாதிரியானது. இந்தியா என்பது சாமியார்களும், படிக்காத காட்டுமிராண்டிகளும் நிறைந்த நாடு என்பதும் தான் அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. சிகாகோ மாநாட்டில் மற்ற நாடுகளில் இருந்து வந்திருந்த ஆன்மிகவாதிகள் பேசி முடித்த பின்பு, கடைசியாக போனால் போகிறதென்று விவேகானந்தரையும் பேசச் சொன்னார்கள். அப்போது அவர் "சகோதர சகோதரிகளே" என்று ஆரம்பித்து தனது சொற்பொழிவை முடித்த பின்பும் கைத்தட்டல் அடங்க வெகு நேரமானது.
சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவு ஆற்றிய பின்னர், அவர் எங்கு சென்றாலும் அவருக்கு மரியாதை அதிகரித்து தான் காணப்பட்டது. அவர் இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சிஷ்யராக சேர்ந்து துறவறம் மேற்கொண்ட பின்பு, பெரும்பாலான நேரங்களில் கையில் பணம் அல்லது உடைகள் என்று பெரிதாக எதையும் வைத்துக்கொண்டதில்லை. நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அந்தந்த ஊர்களில் ஆன்மிக அன்பர்கள் பக்தியோடு தரும் உணவுகளை உண்டும், பல நேரங்களில் வெற்று வெளியிலும் கட்டாந்தரையிலும் படுத்து உறங்கி தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
சுவாமி விவேகானந்தர் மற்ற சந்நியாசிகளை விட மிக மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்த போது, ஒரு முறை உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு ஊருக்கு ரயிலில் பயணம் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் பயணம் செய்த பெட்டியில் பெரும் பணக்காரரான வியாபாரி ஒருவரும் உடன் வந்தார்.
அந்த பணக்கார வியாபாரிக்கோ ஏழைகளையும், சந்நியாசிகளையும் கண்டால், அறவே பிடிக்காது. அதுவும் காவி வேஷ்டி கட்டிய சந்நியாசிகளைக் கண்டால் அவ்வளவு தான் "சந்நியாசிகளா இவர்கள், உழைக்காமல் ஊர் சுற்றம் சோம்பேறிகள்" என்று வாய்க்கு வந்தபடி வசை பாடிக்கொண்டே இருப்பார். இப்போதும் அப்படித் தான் சுவாமி விவேகானந்தரைப் பார்த்ததும் ஏதோ பார்க்காத ஜந்துவைப் பார்ப்பது போல் அலட்சியத்துடனும், அருவருப்புடனும் பார்த்தார்.
அந்த நேரம் பார்த்து, சுவாமி விவேகானந்தருக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. நேரம் செல்லச் செல்ல தாகம் அதிகமானது. அப்போது ஒரு ஊரில் ரயில் நின்றது. அந்த ரயில் நிலையத்தில் சுவாமி விவேகானந்தர் இறங்கி எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தார். தண்ணீர் விற்றுக்கொண்டிருந்தாலும், வாங்குவதற்கு சுவாமி விவேகானந்தரிடம் காசு இல்லை. ஆனால் அந்த வியாபாரியோ தன்னுடைய தேவையைக் காட்டிலும் கூடுதலாகவே தண்ணீர் வாங்கி இருப்பு வைத்துக்கொண்டார். இரயில் புறப்பட்டது.
வியாபாரி, சுவாமி விவேகானந்தரைப் பார்த்து, "பாத்தீங்களா! சுவாமிஜி, குடிப்பதற்கு தண்ணீர் வாங்கக் கூட கையில் காசு இல்லாமல், இந்த பூமிக்கு ஏன் பாரமாக இருக்கிறீர்கள்?" என்று ஏளனமாக கேட்டார். ஆனால் சுவாமி விவேகானந்தரோ அந்த வியாபாரியின் எந்த ஏளனப் பேச்சையும் கண்டு கொள்ளாமல் மௌனமாகவே இருந்தார்.
சிறிது நேரத்தில், சுவாமி விவேகானந்தரும், அந்த வியாபாரியும் இறங்க வேண்டிய ஊர் வந்து சேர்ந்தது. இருவரும் இறங்கிக் கொண்டனர். விவேகானந்தர் அங்கு பயணிகள் தங்குவதற்கு ஏதாவது அறை உள்ளதா? என்று தேடிக்கொண்டிருந்தார். ஆனால், அந்த வியாபாரியோ, அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, தான் கொண்டு வந்த உணவுப் பண்டங்களை தின்று கொண்டிருந்தார். அதோடு நில்லாமல், விவேகானந்தரைப் பார்த்து, பார்த்தீரா சுவாமிஜி, இனியாவது எங்காவது போய் உழைத்து சாப்பிடு என்று பரிகாசம் செய்தார். ஆனால் சுவாமி விவேகானந்தரோ, அந்த வியாபாரியின் பேச்சை சட்டை செய்யாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.
அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. எங்கிருந்தோ ஒரு அன்பர், கையில் சாப்பாடு மூட்டை, தண்ணீர் மற்றும் படுக்கை விரிப்புடன் சுவாமி விவேகானந்தரை நோக்கி வந்தார். வந்தவர், அங்கிருந்த மரநிழலில் விரிப்பை விரித்து சுவாமி விவேகானந்தரை அன்போடு அழைத்து அமரவைத்து, உணவு உண்ண அழைத்தார். விவேகானந்தரோ, அவரின் அழைப்பை .ஏற்க மறத்து, அவரைப் பற்றி விசாரித்தார்.
அந்த அன்பரோ, ஐயா, நான் நேற்று இரவு தூங்கிக்கொண்டிருந்த போது பகவான் ஸ்ரீராம பிரான் என் கனவில் வந்து, உங்களைப் பற்றிய அடையாளங்களைக் கூறி ரயிலில் மிகவும் பசியோடு வந்து கொண்டிருக்கிறார், நீ போய் அவருக்கு வேண்டிய உணவை அளித்து உபசரித்துவிட்டு வா, என்று கூறினார். நானோ வெறும் கனவு தானே என்று அசட்டையாக தூங்கி விட்டேன், ஆனால் அதிகாலையில் மீண்டும் என் கனவில் ஸ்ரீராம பிரான் வந்து திரும்பவும் கூறவே, உடனடியாக உணவை தயார் செய்துகொண்டு வந்தேன் ஐயா, என்று நடந்ததைக் கூறவே, சுவாமிஜி ஸ்ரீராம பிரான் தன்னுடைய வாழ்வில் நிகழ்த்திய அற்புதத்தைக் கண்டு நெகிழ்ச்சியடைந்தார்.
நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்த அங்கிருந்த மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். இதில் அதிகம் வியப்படைந்தவர், அந்த வியாபாரி தான். உடனே சுவாமி விவேகானந்தரின் கால்களில் விழுந்து வணங்கி தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டார்.












Click it and Unblock the Notifications