ஜனவரி இறுதியில் தமிழகம் வரும் மோடி.. என்டிஏ கூட்டணி பலத்தை காட்டும் பாஜக.. கன்னியாகுமரியில் சம்பவம்!
சென்னை: ஜனவரி மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ளதாக தெரிய வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அத்தனை தலைவர்களையும் மேடையேற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு அத்தனை கட்சிகளும் தயாராகி வருகிறது. அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே உறுதி செய்யப்பட்டது. இதன்பின் எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்டமான கூட்டணி அமைக்கப்படும் என்று கூறி வந்தாலும், எந்தக் கட்சியும் அதிமுகவுடன் இணையவில்லை. இதனிடையே கடந்த வாரம் அமித்ஷா திருச்சி வந்து சென்றார்.

அப்போது பொங்கலுக்கு முன்பாக அதிமுக கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பணிகளை முடிக்க வேண்டும் என்று எஸ்பி வேலுமணியிடம் அறிவுறுத்தி சென்றார். இந்த நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற பாமக தலைவர் அன்புமணி தரப்பு, அதிமுக - பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்தது.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லிக்கு பயணிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த பயணத்தின் போது அமித்ஷா மற்றும் பியூஷ் கோயல் இருவரையும் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தெரிகிறது. இதனால் டெல்லியிலேயே அதிமுக - பாஜக இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடையும் என்று தெரிகிறது.
இருந்தாலும் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனின் நிலை குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் என்டிஏ கூட்டணியில் சேர்க்கப்படுவார்களா? அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்வாரா என்ற கேள்விகள் இருக்கிறது. இந்த நிலையில் ஜனவரி மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளார்.
கன்னியாகுமரியில் நடக்கும் பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். இந்த கூட்டத்திலேயே தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்களை பங்கேற்க வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. ஒரே மேடையில் என்டிஏ தலைவர்களை ஏற்றி தங்களின் பலத்தை காட்டுவதே பாஜகவின் திட்டமாக உள்ளது. இதனால் என்டிஏ கூட்டணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications