தேமுதிக, தவெக என்.டி.ஏ கூட்டணியில் இணைகிறதா? பியூஷ் கோயலை சந்தித்த பிறகு சரத்குமார் சொன்ன பதில்!
சென்னை: என்.டி.ஏ கூட்டணியில் இன்னும் எந்தெந்தக் கட்சிகள் சேரப்போகின்றன என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வரும் நிலையில், தேமுதிக, தவெக ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறதா? என்ற கேள்விக்கு பாஜக நிர்வாகி சரத்குமார் பதில் அளித்துள்ளார்.
பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக சென்னைக்கு வருகை தந்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் அவர், கடந்த சில நாட்களாக தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் பேசப்பட்டு வருகிறது.

இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டம் தொடர்பாக நேற்று வரை பியூஷ் கோயலை, பாஜகவின் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து நேரில் சந்தித்து பேசி வந்தனர். அந்த வகையில், நடிகரும், பாஜகவை சேர்ந்த நிர்வாகியுமான சரத்குமார் நேற்று பியூஷ் கோயலை நேரில் சந்தித்துப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், கட்சித் தலைமை உத்தரவிடுவதை நிறைவேற்ற தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சரத்குமார் பேசுகையில், "பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக இருப்பதால் மரியாதை நிமித்தமாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசியுள்ளேன்.
பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி தொடர்பாக ஆலோசித்தோம். இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என நான் ஏற்கனவே தெரிவித்து விட்டேன். அதே சமயம், என்னுடன் பயணித்தவர்கள் போட்டியிட வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்கிறது. இதற்காக கட்சித் தலைமை என்ன உத்தரவு விடுகிறதோ அதனை செய்வேன்" எனத் தெரிவித்தார்.
அவரிடம் பாஜக கூட்டணியில் தேமுதிக இணையுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சரத்குமார், அதனை தலைமை கலந்து பேசி முடிவு செய்யும் என்றும், ஏற்கனவே இந்த கூட்டணியில் இருந்த கட்சிகள் மீண்டும் இணைந்துள்ளது சந்தோஷமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். தவெக தலைவர் விஜய்க்கு இந்த கூட்டணியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, அதுபற்றி எனக்கு தெரியாது என்று கூறிவிட்டுச் சென்றார் சரத்குமார்.
இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அவருடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஐஜேகேவின் பாரிவேந்தர், தமாகாவின் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம் மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் மேடையேற உள்ளனர்.
இன்று மாலைக்குள் வேறு சில கட்சிகளையும் கூட்டணியில் இணைக்க தீவிரமாக முயன்று வருகிறது பாஜக. அந்தவகையில் தான் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை பாஜக தலைவர்கள், அதிமுக தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான கேள்விக்கு பாஜக நிர்வாகி சரத்குமார் மழுப்பலாக பதில் அளித்துவிட்டுச் சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications