இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு
சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று இரவு எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகும் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில், ''தொகுதி பங்கீடு தொடர்பான அனைத்து விஷயங்களும் இன்னும் 4 நாட்களில் இறுதி செய்யப்பட்டு விடும். அனைத்து கட்சிகளும் அமர்ந்து தொகுதி பங்கீட்டை வெளியிடுவோம். திமுக கூட்டணி போல் நாங்கள் கிடையாது. அமைதியாக கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி தொகுதி பங்கீட்டை வெளியிடுவோம்'' என்றார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மே 4ல் ரிசல்ட் வெளியாகிறது. இந்நிலையில் தான் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு முடியவில்லை. இழுபறி நீடித்து வருகிறது. இப்படியான சூழலில் தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

நேற்று இரவு டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தை சுமார் ஒன்றரை மணிநேரம் வரை நடந்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லி வந்தது ஏன்?
''மத்திய உள்துறை அமைச்சரை அவரது இல்லத்தில் இரவு 10 மணிக்கு சந்தித்து பேசினேன். தமிழ்நாடு அரசியல் குறித்து அவரிடம் கலந்து ஆலோசித்தேன். 2 முறை தான் டெல்லிக்கு வந்துள்ளேன். அன்றைக்கு ஒருமுறை, இன்றைக்கு ஒருமுறை தான் வந்துள்ளேன். 4 -5 மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. இதனால் அவருக்கு (அமித்ஷா) பணி அதிகம். அதனை நோக்கி பணி செய்து வருகிறார். இனி தேர்தல் முடியும் வரை பார்க்க முடியாது என்பதால் டெல்லி வந்தேன். இன்றைய மீட்டிங்கில் பொதுவான ஆலோசனை மேற்கொண்டோம்.
4 நாட்களில் தொகுதி பங்கீடு இறுதி
தொகுதி பங்கீடு தொடர்பாக அனைத்தும் இன்னும் 4 நாட்களில் இறுதி செய்யப்பட்டு விடும். பியூஷ் கோயல் சென்னை வருகிறார். 234 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் அமர்ந்து தொகுதி பங்கீடு செய்யப்படும். திமுக கூட்டணி மாதிரி நாங்கள் கிடையாது. அமைதியாக கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி தொகுதி பங்கீட்டை வெளியிடுவோம்.
எந்த சிக்கல்களும் இல்லை.
எங்களுக்குள் எந்த சிக்கல்களும் இல்லை. எங்களுக்குள் விட்டு கொடுத்து யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதோ அந்த தொகுதிகளை பெறுவது தான் எங்களின் நோக்கம். 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக தலைமையிலான கூட்டணி களமிறங்குகிறது. முதலில் தொகுதி பங்கீடு செய்த பிறகு பிரசாரம் தொடங்குவோம்'' என்றார்.
தவெகவுடன் பேச்சு கிடையாது
இதையடுத்து தவெகவுடன் கூட்டணி தொடர்பாக கேள்வி எழுப்பபப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ''நான் தெளிவாக சொல்லிவிட்டேன். தவெகவும் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை என்று கூறிவிட்டனர். நாங்களும் கூறிவிட்டேன். நானும் கூறிவிட்டேன். தவெக தலைவரும் சொல்லிவிட்டார். பேச்சுவார்த்தையே நடக்கவில்லை'' என்றார்.
அதன்பிறகு பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறதோ? என்ற கேள்விக்கு, ''இந்த கூட்டணிக்கு தலைமை அதிமுக தான். எங்கள் கட்சியின் தலைவர்கள் யாரும் தவெகவினரை சந்தித்து பேசவில்லை. அவர்களும் எங்களை சந்தித்து பேசவில்லை. திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய கட்சிகள் அந்த கூட்டணியில் இணைந்துவிட்டது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய கட்சிகள் எங்களுடன் சேர்ந்து விட்டது. இனி தேர்தலை நோக்கி பயணிக்க வேண்டியது தான்'' என்றார்.
அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசம்
மேலும் எடப்பாடிபழனிச்சாமி, ''அதிமுக 31 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சி. தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். மத்திய அரசிடம் இருந்து நிறைய திட்டங்களை வாங்கி கொடுத்துள்ளோம். ஆனால் திமுக ஆட்சி அப்படியில்லை. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. தினமும் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நடக்கிறது. பாலியல் வன்கொடுமை இல்லாத நாளே இல்லை. இவர்களின் ஒரே சாதனை.. ஊழல் செய்தது தான்'' என்றார்.
அன்புமணி - டிடிவி டெல்லி பயணம் ஏன்?
இதையடுத்து, இன்று அன்புமணி ராமதாஸ் - டிடிவி தினகரன் ஆகியோர் இன்று டெல்லி பயணிப்பது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ''அரசியல் சூழல் எப்படி உள்ளது? என்று கலந்து பேச உள்ளனர்'' என்றார்.












Click it and Unblock the Notifications