தவெக தாவிய.. 6 அதிமுக எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கிடையாது? விடாத எடப்பாடி
சென்னை: தமிழகத்தில் 6 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு முதல்வர் விஜய்யின் தவெகவில் இணைந்துள்ளனர். இந்த சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தான் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த 6 தொகுதகிளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதற்கு முட்டுக்கட்டையை அதிமுக போட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து திமுக ராஜ்யசபா எம்பி இன்பதுரை கடிதம் வழங்கி உள்ளார்.
அதிமுகவில் இருந்து பல நிர்வாகிகள் விலகி முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து வருகின்றனர். குறிப்பாக தற்போது வரை 6 எம்எல்ஏக்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் ஐக்கியமாகி உள்ளனர்.

அதன்படி மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா, அம்பை எம்எல்ஏ இசக்கி சுப்பையா, விராலிமலை எம்எல்ஏ விஜயபாஸ்கர், கரூர் எம்எல்ஏ எம்ஆர் விஜயபாஸ்கர் என 6 பேர் அடுத்தடுத்து தங்களின் எம்எல்ஏ பதவியை துறந்து தவெகவில் இணைந்துள்ளனர். இதில் 3 பேர் முன்னாள் அமைச்சர்கள் ஆவார்கள்.
இவர்கள் ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள இந்த 6 சட்டசபை தொகுதிகள் மற்றும் முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியான திருச்சி கிழக்கு தொகுதி என்று மொத்தம் 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது இந்த தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஒரு சட்டசபை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.
இதனால் இன்னும் சில மாதங்களில் இந்த 7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல நடத்தப்பட கூடாது என்று அந்த கட்சியின் ராஜ்யசபா எம்பி இன்பதுரை இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை டெல்லியில் சந்தித்து புகார் கடிதம் வழங்கி உள்ளார்.
அதில், ''தமிழகத்தில் 6 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். இவர்களின் ராஜினாமாவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வரும்வரை இந்த 6 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக்கூடாது'' என கூறப்பட்டுள்ளது.
அதன்பிறகு இன்பதுரை பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர், ''தமிழகத்தில் காலியாக உள்ள 6 சட்டசபை தொகுதிகள் சாதாரணமானவை அல்ல. சட்டமன்ற உறுப்பினர் இறந்தார் என்பதால் அது காலியாகவில்லை. மாறாக அரசியல் சலுகைகள் குறித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த தொகுதிகள் செயற்கையாகவே காலியாகி உள்ளது. எம்எல்ஏக்களின் ராஜினாமாவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்பு வரும்வரை இடைத்தேர்தல்கள் நடத்தக்கூடாது.
சட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முன்பு இடைத்தேர்தல்களை நடத்துவது என்பது அரசியலமைப்பின் 10வது அட்டவணையை தோற்கடிக்கும் வகையில் இருக்கும். ஏனென்றால் இது கட்சி மாறிய ஆளும் கட்சியின் ஆதரவு வேட்பளர்களை பதவி விலகியஉடனேயே மீண்டும் சட்டசபைக்கு நுழைய அனுமதித்து விடும். அதோடு சட்டசபையில் 107 எம்எல்ஏக்களை வைத்துள்ள தவெக மெஜாரிட்டி பெறும் வகையில் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. இதனால் சட்ட போராட்டம் முடியும் வரை இந்த 6 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications