வந்தது உத்தரவு.. எல்லாரும் ஒன்று.. முதல்வரின் தனிபிரிவுக்கு வரும் புகார்கள் குறித்து புது அறிவிப்பு
முதல்வரின் தனிப்பிரிவில் புகார் குறித்து அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது
சென்னை: முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் தெரிவிக்க நேரில் வரவேண்டாம் என்றும் ஆன்லைனிலேயே புகாரை அனுப்பவும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் அன்றாடம் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மாவட்டங்கள் மற்றும் துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீப காலங்களில் இலவச வீடு ஒதுக்கீடு கோரி தினமும் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க காத்து நிற்கின்றனர்.

கர்ப்பிணி
முதியோர், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் இதில் அடங்குவர். தற்போது கோவிட் 19 என்ற பெருந்தொற்று கட்டுக்குள் இருந்தாலும், இவ்வாறு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இத்தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க குவிந்து வருவதால் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மனுக்கள்
முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெறுவதோடு மட்டுமின்றி, தபால் / இணையதளம் (www.cmcell.tn.gov.in)/ மின்னஞ்சல் ([email protected]) மற்றும் முதலமைச்சர் உதவி மையம் (cmhelpline.tnega.org) ஆகிய வழிமுறைகளிலும் மனுக்கள் பெறப்பட்டுவருகிறது. அவ்வாறு இணைய வழியாக பெறப்படும் மனுக்களுக்கான ஒப்புகை சம்பந்தப்பட்டவரின் அலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.

நடைமுறை
கோரிக்கை (அல்லது) மனு எண் மூலமாகவே தங்கள் கோரிக்கை நிலை குறித்து, இணையம் வழியாகத் தெரிந்து கொள்ளலாம். பொதுமக்களிடம் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அல்லது இணையம் வழியாகவோ, எவ்வழியில் பெறப்பட்டாலும், முதலமைச்சரின் தனிப்பிரிவில் அனைத்து மனுக்களுக்கும் ஒரே மாதிரியான நடைமுறையே பின்பற்றப்படும்.

மனுக்கள்
ஆகையால், கொரோனா பெருந்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்கும் வகையில், முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்கள் தினமும் நேரடியாக மனுக்களை அளிப்பதற்காக ஆயிரக்கணக்கில் கூடுவதைத் தவிர்த்து இணையவழிச் சேவைகளைப் பயன்படுத்தி மனுக்களை அளித்துப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications