NEET 2026: நீட் தேர்வு எழுதப் போறீங்களா? மாணவர்களுக்கு அவசர அவசரமாக வந்த அறிவிப்பு! காலக்கெடு நீட்டிப்பு!
சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான முக்கிய நுழைவுத் தேர்வாக கருதப்படும் NEET தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவிற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை (National Testing Agency ) தெரிவித்துள்ளது.
முன்னதாக நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் மார்ச் 8ஆம் தேதி இரவு 11:50 மணி வரை என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக மாணவர்கள் பலர் விண்ணப்பிக்க முடியாமல் சிக்கலில் சிக்கியதால், தற்போது அந்த கால அவகாசம் மார்ச் 11ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2026-27ஆம் கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வாக நீட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி MBBS, BDS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகள் மட்டுமல்லாமல், AYUSH தொடர்பான சித்தா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் இந்த தேர்வு அவசியமாக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்புகள் மற்றும் ராணுவக் கல்லூரிகளில் வழங்கப்படும் பிஎஸ்சி நர்சிங் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் சேர்வதற்காக நீட் தேர்வு மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். நீட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கியது.
இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொத்தம் 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. இதனால் பல்வேறு மொழி பின்னணியில் உள்ள மாணவர்களும் தேர்வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
ஆனால் கடந்த மூன்று நாட்களாக நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதளம் கடுமையான தொழில்நுட்ப சிக்கல்களை சந்தித்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். குறிப்பாக சர்வர் செயல்பாடு மிகவும் மெதுவாக இருந்ததால் விண்ணப்பப் பதிவு செய்யும் செயல்முறை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
மாணவர்கள் தெரிவித்த புகார்களின் படி, விண்ணப்பப் படிவத்தை நிரப்பும் போது இணையதளம் தாமதமாக செயல்பட்டது. ஆவணங்களை பதிவேற்ற முயன்றபோது தளம் திடீரென முடங்கிவிடுவது போன்ற பிரச்சினைகளும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தேர்வு கட்டணத்தை செலுத்தும் கட்டத்தில் பல்வேறு தொழில்நுட்பப் பிழைகள் ஏற்பட்டதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக பல ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பத்தை முழுமையாக சமர்ப்பிக்க முடியாமல் கடந்த சில நாட்களாக சிரமம் அனுபவித்தனர். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நெருங்கிவிட்ட நிலையில் இந்த பிரச்சினை மாணவர்களுக்கு அதிகமான பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தேசிய தேர்வு முகமைக்கு கோரிக்கை விடுத்தனர். தொழில்நுட்ப குறைபாடு காரணமாக ஏற்பட்ட இந்த சிக்கலுக்கு மாணவர்கள் காரணம் அல்ல என்பதால், விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். மாணவர்களின் இந்த கோரிக்கையை பரிசீலித்த தேசிய தேர்வு முகமை தற்போது விண்ணப்பக் காலக்கெடுவை நீட்டித்துள்ளது. இதன் மூலம் இதுவரை விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், புதிய காலக்கெடுவான மார்ச் 11ஆம் தேதி இரவு 9 மணிக்குள் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பின் எந்த காரணத்திற்காகவும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications