அய்யோ! அய்யோ! குடும்பம் குடும்பமாய் காவு வாங்குதே நீட்- பலி பீடத்தை எப்போது ’பொலி’ போடுவீங்களாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் நீட் எனும் பலி பீடத்துக்கு அப்பாவும் மகனுமாய் இரு உயிர்கள் காவு கொடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நீட் விலக்கு மசோதா மீதான பிடிவாதமான எகத்தாள அறிவிப்புதான் தமிழ்நாட்டில் இப்போது இரு உயிர்களை கழுவேற்றி படுகொலை செய்திருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை.

தமிழ்நாட்டு பாடத் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்து படிப்புக்கு தேர்வு செய்யப்படுகிற முறைக்கு கொள்ளி வைத்தது நீட். மருத்துவ படிப்பு படிக்க வேண்டுமா? அகில இந்திய அளவில் நடத்தப்படுகிற நுழைவுத் தேர்வில் உரிய மதிப்பெண் பெற்றால்தான் - நீட் தேர்வில் மதிப்பெண் பெற்றால்தான் மருத்துவ கனவு கை கூடும் என்கிற சட்டம் வந்த நாள் முதலே தமிழ்நாடு எதிர்த்து கொண்டிருக்கிறது. இந்த சட்டம் வந்த போது சில ஆண்டுகள் தமிழ்நாட்டுக்கு விதி விலக்கும் இருந்தது. ஆனால் அரியலூர் அனிதா நீதிமன்ற படிகளேறி போராடியும் பார்த்தும் நீதியைப் பெற முடியாமல் தூக்கு கயிற்றை கழுத்தில் இறுக்கிக் கொண்டார். 2017-ல் தொடங்கிய 'நீட் சாவுகள்' இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Double Suicides- NEET killed Father, Son in Tamil Nadu

மருத்துவ படிப்பு: இந்தியாவில் பெருநகரம், நகரம், சிறுநகரம், பேரூர், கிராமங்கள் என அனைத்திலும் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்விமுறையே கிடையாது. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு பாடத்திட்டத்தை செயல்படுத்துகிறது. இதில் சிபிஎஸ் இ என்பதும் ஒன்று. மாநில பாடத்திட்டங்களின் கீழ் படித்து நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்து மருத்துவர்களானவர்களால் எந்த குடியும் முழுகிப் போய்விடவில்லை. இந்தியாவின் மருத்துவ ரேங்கும் தரம் குறைந்துவிடவில்லை.

நீட் திணிப்பு: இந்திய கிராமப்புற, ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் மருத்துவ கனவை குழிதோண்டியும் கழுவேற்றியும் கொன்றாக வேண்டும் என்ற கங்கணத்துடன் நீட் தேர்வு திணிக்கப்பட்டது. நீட் தேர்வு வேண்டாம்; விலக்கு கொடுங்கள் என பிடிவாதம் பிடிப்பதன் அர்த்தத்தை உணர்ந்து கொள்ளாமல் இரக்கமற்றவர்களாக நீட் எழுதினால் மருத்துவம் படி.. இல்லையெனில் முடிவு எடுத்துக் கொள் என தூக்கு கயிறுகளை நோக்கி தள்ளி தள்ளிவிட்டுத்தான் தமிழ்நாட்டு மாணவர்கள் செத்து செத்து போகிறார்கள்.. இப்போது அப்பாவும் மகனுமாய் இரு உயிர் காவு கொள்ளப்பட்டு இருக்கிறது!

எகத்தாள குரல்கள்: நீட் தேர்வுக்கு விலக்கு நிச்சயம் என ஒரு பக்கம் அரசு போராடுகிறது- நீட் தேர்வு விலக்கு பெறுவதற்காக சென்னை முதல் டெல்லி வரை ஆளும் அரசு போராடுகிறது. ஆனால் எங்க போய் முட்டினாலும் என்கிட்ட எதுவும் நடக்காது என்கிற எகத்தாள குரல்கள் நீட் எனும் கழுமரத்தை தமிழ்நாட்டில் பளபளக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த எகத்தாள குரல்கள்தான் இப்போது அப்பாவையும் மகனையும் நீட் எனும் பலி பீடத்தில், நீட் எனும் கழுமரத்தில் கழுவேற்றிப் பச்சைப் படுகொலை செய்திருக்கிறது.

பணம் இருந்தால்தான் பாழும் மருத்துவ படிப்பு: உயிர் பலி எடுக்கக் கூடிய ஒரு நீட் தேர்வு முறையை ரத்து செய்து ஒழித்தால்தான் என்னவாம்? எத்தனை குடும்பங்கள்தான் சொந்த வாழ்விடத்தை வருவாயை தொலைத்துவிட்டு பிள்ளைகளின் மருத்துவ கனவுக்காக கோவைக்கும் ஈரோட்டுக்கும் சென்னைக்கும் பெங்களூருக்கும் போய் அகதிகளாக வாழ முடியும்? எத்தனை குடும்பங்கள்தான் ஆண்டுக்கு ரூ15 முதல் ரூ20 லட்சம் செலவழித்து நீட் தேர்வில் மதிப்பெண்களை பெற போராட முடியும்? பள்ளிக் கூடங்களில் படிக்கும் போதே நீட் கோச்சிங் என்பது அறிவிக்கப்படாத புதிய சேர்க்கையாக இணைந்துவிடுகிறது. நீட் கோச்சிங் என்பதற்கு மட்டுமே தனிக்கட்டணம். ஆனால் பெரும்பாலான பள்ளிகள், நீட் கோச்சிங் மையங்களுடன் கள்ளக் கூட்டு வைத்துக் கொண்டுதான் இந்த கொள்ளையடித்தலில் கொழித்துக் கொண்டிருக்கின்றன. நடுத்தர வர்த்தக்கத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்களால் கூட இவ்வளவு பணம் கொட்டி நீட் தேர்வுக்கு படிக்க வைக்க முடியுமா? என்பது மலைப்பாக இருக்கிறது. அப்படியானால் கிராமப்புறத்து ஒடுக்கப்பட்ட, இலவச கல்வி பெறுகிற ஏழை வீட்டு பிள்ளைகள் ஜென்மத்திலும் மருத்துவ படிப்பை நினைத்து கூட பார்க்கவே கூடாது என்பதுதான் நீட் தேர்வு கொண்டு வந்ததன் அடிப்படை என எப்படி பேசாமல் இருக்க முடியும்? தமிழ்நாட்டில் முந்தைய அதிமுக அரசு கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கியதால் சில மாணவர்கள் மருத்துவ படிப்பை போராடி தொட முடிகிறது. தற்போதைய திமுக அரசும் இதனை தொடருகிறது. இது லேசான ஆறுதல். அவ்வளவுதான்.

எப்போதுதான் காது கேட்கும்? கண்கள் திறக்கும்?: மருத்துவம் படிக்க எங்களுக்கு இத்தனை நாள் உரிமை இருந்தது; மருத்துவ படிப்பு படிக்க எங்களுக்கும் கனவு காண உரிமை இருக்கிறது. அதை எதன் பெயராலும் எவராலும் பறிக்க முடியாது என்கிற எங்கள் குக்கிராமத்து பிஞ்சுகளின் கதறல் உங்கள் காதுகளில் எப்போது கேட்கும்? இத்தனை நாள் கதறினோம்.. இத்தனை சடலங்களை முன்வைத்தோம்.. இப்போது இரு உயிர்களை உங்கள் நீட் பலி பீடத்தின் முன் காவு கொடுத்துவிட்டு நிற்கிறது தமிழ்நாடு. எங்கள் கதறலை எங்கள் கூப்பாட்டை உங்கள் காதுகள் இனியேனும் கேட்டு தொலையுமா? அரசாதிபதிகளே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+