நீட் தேர்வுக்கு விலக்கு.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு.. நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம்
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் தொடரும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைத்துக்கட்சி கூட்டத்திற்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை: நீட் நுழைவுத்தேர்வு விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் சனிக்கிழமையன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
Recommended Video
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்த உடன் தமிழக சட்டசபையில் விதி 110ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஒன்றிய உள்துறை அமைச்சர் தமிழக எம்.பி.க்கள் குழுவை சந்திக்க மறுத்தது மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமானது என்று கூறினார்.
கல்வி என்பது அடிப்படை உரிமை. நுழைவுத் தேர்வுகள் விளிம்பு நிலை மாணவ சமுதாயத்தை பாதிக்கும். 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி சேர்க்கை அமையவேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

மாநில அரசின் உரிமை
எந்தவொரு நுழைவுத்தேர்வு என்றாலும், அது ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கும். ஏழை, எளிய மாணவர்களின் நலன் கருதிதான் நுழைவுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மருத்துவத்துறையில் தமிழகம் நாட்டிற்கே முன்னோடியாக உள்ளது. மாநில அரசிடமிருந்து உரிமையை பறித்துள்ளது மத்திய அரசு. பள்ளிக்கல்வி முறையை அர்த்தமற்றதாக்கிவிட்டது நீட் தேர்வு, இதனை வேடிக்கை பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.

அமித்ஷா மறுப்பு
மாநில நிதியில் கட்டப்படும் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான உரிமையை நீட் தேர்வு பறித்துவிட்டது. நீட் விலக்கு மசோதா ஆளுநரால் இன்னும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படவில்லை. தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க மறுத்து வருகிறார்.

அனைத்துக்கட்சி கூட்டம்
நீட் தேர்வு விலக்கு மசோதா பற்றி கடிதம் அளிக்க மத்திய உள்துறை அமைச்சர் நேரம் கொடுக்கவில்லை. இது மக்களாட்சி மாண்புக்கு எதிரானது. நீட் தேர்வுக்கு எதிரான சமூக நீதிக்கான போராட்டம் தொடரும். போராட்டங்கள் மூலமே வளர்ச்சி பெற்றுள்ளோம். நீட் தேர்வு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அடுத்த கட்ட நடவடிக்கை
நீட் தேர்வு விவகாரத்தில் எள் முனையளவும் பின்வாங்கப்போவதில்லை என்றும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைத்து கட்சி குழுவை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க மறுத்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications