3 பிரச்சனைகள்.. டெல்லியில் "முறுக்கிய" டி.ஆர் பாலு.. நேரடியாக களமிறங்கிய ஸ்டாலின்.. என்ன நடக்கிறது?
சென்னை: தமிழ்நாட்டின் 3 முக்கியமான பிரச்சனைகளில் திமுக மேலிடம் தீவிர கவனம் செலுத்த தொடங்கி உள்ளதாம். அதிலும் பொறுத்து பொறுத்து பார்த்த முதல்வர் ஸ்டாலின் நேரடியாக 3 பிரச்சனைகளில் குரல் கொடுக்க தொடங்கி உள்ளதாக திமுக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மத்திய பாஜக அரசுக்கும் மாநில திமுக அரசுக்கும் இடையிலான உரசல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி உள்ளன. திமுக தான் கொடுத்த சில வாக்குறுதிகளை நிறைவேற்ற தீவிரமாக முயன்று வரும் நிலையில் அதற்கு பாஜக முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்று அக்கட்சி தரப்பு கருதுகிறது. முக்கியமாக நீட் விலக்கு விவகாரத்தில் திமுகவிற்கு பாஜக தரப்பில் இருந்து இதுவரை எந்த கிரீன் சிக்னலும் கிடைக்கவில்லை.
நீட் தேர்வு பிரச்சனை மட்டுமின்றி மேலும் 2 விவகாரங்கள் சேர்த்து மொத்தம் 3 விவகாரங்களால் திமுக தரப்பு பாஜக மேலிடம் மீது கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. என்னதான் பிரதமர் மோடியை தமிழ்நாட்டிற்கு அழைத்து மருத்துவமனைகளை திறக்க சொல்லும் அளவிற்கு understanding இருந்தாலும்.. மாநில திமுக அரசுக்கு மத்திய அரசு மீது நீட் உள்ளிட்ட சில முக்கியமான விஷயங்களில் அதிருப்தி இருக்கிறதாம்.

நேரம் கொடுக்கவில்லை
முதலில் நீட் தேர்வு விவகாரம்தான் திமுக - பாஜக இடையே மோதலை தீவிரம் ஆக்கியது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு மாநில அரசு சட்டம் இயற்றி உள்ளது. கடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவையில் இது தொடர்பான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். தற்போது நீட் விலக்கு தொடர்பான அரசின் மசோதா ஆளுநர் மாளிகையில் பரிசீலனையில் உள்ளது. ஆனால் இதற்கு இன்னும் ஆளுநர் தரப்பு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த வாரம் கடந்த செவ்வாய் கிழமை தமிழ்நாடு எம்பிக்கள் குழு டெல்லி சென்றது.

விட்டு பிடித்தனர்
திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு, அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், விசிக தொல். திருமாவளவன், சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன் உட்பட தமிழ்நாடு எம்பிக்கள் குழுவாக சென்றுள்ளனர். அன்று மதியம் 12 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க ஏற்கனவே டிஆர் பாலு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருந்தார். ஆனால் அன்று அமித் ஷாவை அனைத்து கட்சி எம்பிக்களால் சந்திக்க முடியவில்லை. அதன்பின் 4 முறை முயன்றும் கூட அமித் ஷாவை சந்திக்க முடியவில்லை.

அமித் ஷா டி ஆர் பாலு
அமித் ஷா வீட்டு வாசலிலேயே இரவு 9 மணி வரை நின்றும் கூட அவரை சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதல் 3 முறை சந்திக்க முடியாத போதும் கூட எம்பி டிஆர் பாலு அதை பற்றி பெரிதாக கோபமாக பேசவில்லை. மத்திய அமைச்சர் பிசியாக இருப்பார். அவர் நேரம் கிடைத்ததும் கண்டிப்பாக கொடுப்பார். இதில் புறக்கணிப்பு எல்லாம் இருக்காது என்று குறிப்பிட்டு வந்தார். ஆனால் அதன்பின் 4வது முறை முயன்றும் கூட அமித் ஷாவை டி ஆர் பாலுவால் சந்திக்க முடியவில்லை.

டிஆர் பாலு கோபம்
இதையடுத்துதான் கொஞ்சம் விரக்தியுடனும் கோபத்துடனும் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை சட்டமாக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். ஆளுநர்தான் அதை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் ஆளுநர் இன்னும் அனுப்பவில்லை. இது சட்ட விதிப்படி தவறு. ஆளுநர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறார். நீட் விலக்கு மசோதா சட்டம் ஆகாமல் இருக்க ஒரே காரணம் ஆளுநர் ஆர்என் ரவி. அவர் செய்த தவறு இது. தனது அவருக்கு அவர் பொறுப்பேற்று அவர் உடனே பதவி விலக வேண்டும் என்று கோபமாக தெரிவித்தார்.

ஸ்டாலின் கோபம்
அதுவரை நீட் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சாந்தமான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. குடியரசுத் தலைவரை சந்தித்து மனு தருவது, உள்துறை அமைச்சரை சந்தித்து மனு அளிப்பது என்று பூ பாதையில்தான் திமுக தரப்பு சென்று கொண்டு இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் அமித் ஷா தொடர்ந்து தமிழ்நாடு எம்பிக்களை புறக்கணித்த நிலையில் கோபம் அடைந்த முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பாதையை கையில் எடுத்து இருக்கிறார் என்கிறார்கள். அதை முன்னிட்டே முதல்வர் இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். இதில் சட்ட போராட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

சட்ட போராட்டம்
மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளாத நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக களமிறங்கி இன்று கூட்டத்தை நடத்தி இருக்கிறார். நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் தொடரும் என்று அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஒரு பக்கம் டெல்லியில் டிஆர் பாலு தீவிரம் காட்டி வரும் நிலையில் இங்கு முதல்வர் தரப்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் நீட் தேர்வு தொடர்பாக வழக்கு ஒன்றும் தொடுக்கப்படும் என்று தகவல்கள் வருகின்றன.

ஜிஎஸ்டி நிலுவை தொகை சீண்டல்
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் ஜிஎஸ்டி நிலுவை தொகை , இழப்பீடு காரணமாகவும் மாநில திமுக அரசு மத்திய அரசு மீது அதிருப்தியில் இருக்கிறது. இதை பற்றி ஆளுநர் உரையில் கூட அரசு தரப்பு தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது. ஆளுநர் உரையில் ஜிஎஸ்டி காரணமாக தமிழ்நாட்டின் வருவாய் குறைந்துவிட்டது என்பது உள்ளிட்ட தகவல்கள் அடங்கி இருந்தன.

வெள்ள நிவாரணம்
மத்திய அரசுக்கு "குத்தி காட்டும்" வகையில் இந்த விமர்சனங்களை ஆளுநர் உரையில் தமிழ்நாடு நிதித்துறை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் திமுகவின் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு இந்த தொகை வராததுதான் காரணம் என்ற கொதிப்பில் ஆளும் தரப்பு இருக்கிறதாம். இந்த இரண்டு விஷயங்கள் போக கூடுதலாக வெள்ள நிவாரணம் தொடர்பாகவும் முதல்வர் ஸ்டாலின் கொஞ்சம் கொதிப்பில் இருக்கிறாராம்.

கொதிப்பு
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வெள்ள நிவாரணம் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படுவது இல்லை என்பதில் முதல்வர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நீட், ஜிஎஸ்டி, வெள்ள நிவாரணம் ஆகிய 3 விஷயங்கள் வரும் நாட்கள் மத்திய மாநில அரசுகள் இடையே மோதலை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.. இதில் முதல்வரே நேரடியாக கவனம் செலுத்தி வருவதால் விவகாரம் தீவிரம் எடுக்கும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications