"தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட நீட் தேர்வு மாபெரும் உயிர்கொல்லும் Scam" - உதயநிதி ஸ்டாலின்
சென்னை: "தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட நீட், Question Paper Leak, ஆள்மாறாட்டம், பயிற்சி மைய கொள்ளை, அச்சுறுத்தும் Exam Hall Frisking என மாபெரும் உயிர்கொல்லும் Scam ஆகியிருக்கிறது. மோசடியான NEET தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும்" என தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 3 ஆம் தேதி நடந்த இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஜூன் 21 ஆம் தேதியில் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்படுவதால் லட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் நீட் மறுதேர்வு விரக்தி காரணமாக தமிழகத்தில் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். கோவையில் நீட் தேர்வு எழுதவிருந்த மாணவி அனுகீர்த்தனா, மன அழுத்தம் காரணமாக உறவினர்களுக்கு உருக்கமான வாட்ஸ்ஆப் செய்தி அனுப்பிவிட்டு கடந்த ஜூன் 17 அன்று தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த நீட் தேர்வுக்கு தயாராகி வந்த கோபிகா (19) என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கோபிகா, கடந்த ஓராண்டாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் மீண்டும் தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.
ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் நீட் மறுதேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் மறுதேர்வு அச்சத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. நீட் மறுதேர்வால் 2வது மாணவி தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை கோபிகா, தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
எப்படியும் டாக்டராகிவிடுவார் என்று ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகளை, நீட் அரக்கனிடம் பலி கொடுத்து தவிக்கும் கோபிகாவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட நீட் தேர்வு, Question Paper Leak, ஆள்மாறாட்டம், பயிற்சி மைய கொள்ளை, அச்சுறுத்தும் Exam Hall Frisking என மாபெரும் உயிர்கொல்லும் Scam ஆகியிருக்கிறது. மோசடியான NEET தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும்.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, நீட் ஒழிப்பிற்காக எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும் - சட்ட போராட்டத்தையும் த.வெ.க அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும். இந்த நேரத்தில், NEET தேர்வுக்குத் தயாராகும் தம்பி - தங்கைகள், Exam Stress-க்கு ஆளாகாமலும், தவறான முடிவுகளை எடுக்காமலும் தன்னம்பிக்கையுடன் இச்சூழலை எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications