கொஞ்சம் மிஸ்ஸானாலும் பெரிய சிக்கல்.. நீட் கெடுபிடிகள் என்ன.. பதற்றத்தை தவிர்க்க என்ன செய்யணும்!
சென்னை: இன்று நாடு முழுக்க இளங்கலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு நடைபெறுகிறது. மருத்துவக் கனவுடன் 'நீட்' தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் தேர்வு மையத்திற்குச் செல்லும் முன் எதையெல்லாம் கொண்டு செல்ல வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்த தேசியத் தேர்வு முகமை முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளன.
இன்று நாடு முழுக்க நீட் தேர்வு நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கும் நீட் தேர்வை சுமார் 22.80 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். நீட் தேர்வை முறையாக நடத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே தேர்வு மையங்களில் தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்க, விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவது அவசியமாகிறது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

30 நிமிடங்கள்
தேர்வு தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையங்கள் திறக்கப்படும். தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு, அதாவது மதியம் 1:30 வரை மாணவர்கள் மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். 1.30 மணிக்கு மேல் எந்த ஒரு மாணவரும் தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். 30 நிமிடங்களுக்கு முன்பு வரை அனுமதி என்றாலும் கூட தேவையில்லாத பதற்றத்தைத் தடுக்க குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பே மையத்திற்குச் சென்றுவிடவும். மாணவர்கள் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் பயோமெட்ரிக் உள்ளிட்ட சரிபார்ப்புகளும் நடைபெறும்.
என்ன உடைகளை அணியலாம்?
சவுகரியமான ஆடைகளை அணிவதே சிறந்தது. தேர்வு எழுதும்போது அப்போது தான் ஆடைகளால் தொந்தரவு வராது. குறைந்த உயரமுள்ள ஹீல்ஸ் கொண்ட செருப்புகள் அணியலாம். முழுக்கைச் சட்டைகள் அல்லது கம்பளி ஆடைகள் அணிவதாக இருந்தால்.. கூடுதல் சோதனைக்காகத் தேர்வு மையத்திற்கு முன்னதாகவே வர வேண்டும். கலாச்சாரம் அல்லது மத ரீதியான உடைகள்/பொருட்கள் அணிந்து வருபவர்கள், சோதனைக்காக 2 மணி நேரத்திற்கு முன்பே மையத்திற்கு வர வேண்டும்.
போட்டோ
தேர்வு மையத்திற்குள் செல்லும்போது, அட்மிட் கார்டு கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். இதில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். வருகைப் பதிவேட்டில் ஒட்டுவதற்கு ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் தேவை. மேலும், அசல் அடையாளச் சான்று கொண்டு வர வேண்டும். அட்மிட் கார்டுடன் தரப்பட்டுள்ள புரோஃபார்மாவில் ஒட்டுவதற்கு ஒரு போஸ்ட்கார்ட் அளவு (4"X6") போட்டோ அவசியம். மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரராக இருப்பின் PWBD சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.
தடை செய்யப்பட்ட பொருட்கள்
தேர்வை மையத்தில் செல்போன், புளூடூத், இயர்போன், ஸ்மார்ட் வாட்ச், கேமரா போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல வாலட், கைக்கடிகாரம், கூலிங் கிளாஸ், கைப்பை, பெல்ட், தொப்பி மற்றும் ஆபரணங்கள் எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை. தண்ணீர் பாட்டில் உட்பட எந்த ஒரு உணவுப் பொருளையும் உள்ளே கொண்டு செல்ல முடியாது. மேலும், இந்த பொருட்களைப் பாதுகாப்பாக வைக்கத் தேர்வு மையத்தில் எந்த ஒரு சேமிப்பு வசதியும் இருக்காது. எனவே, இவற்றை வீட்டிலேயே விட்டுவிட்டு வருவது சிறந்த முடிவாகும்.!
தேர்வு மையத்திற்குச் செல்லும் மாணவர்கள் எவ்வித உலோக ஆபரணங்களையும் அணியாமல் செல்வது சோதனையின் போது ஏற்படும் நேர விரயத்தைத் தவிர்க்கும். உங்களின் ஒரு வருட உழைப்பு வீணாகாமல் இருக்க, இந்தச் சிறு சிறு விதிமுறைகளைக் கவனமாகக் கடைப்பிடியுங்கள்.













Click it and Unblock the Notifications