பரந்தூர் விமான நிலையம் விவகாரம்! தமிழக அரசுடன் மல்லுக்கட்டும் எஸ்.டி.பி.ஐ.! பின்னணி என்ன?
சென்னை: பரந்தூர் விமான நிலையம் விவகாரத்தில் வாழ்வாதாரத்தை காக்க போராடும் மக்களுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து துணை நிற்கும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
மக்கள் பாதிக்காதவாறு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக்கூறிவிட்டு, மறுபுறம் அதற்கு மாற்றமான முறையில் செயல்படுத்துவது மக்களை ஏமாற்றும் செயல் என விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பரந்தூர் விமான நிலையம்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 130 நாட்களுக்கும் மேலாக ஏகனாபுரத்தில் 13 கிராம மக்கள் இணைந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரந்தூரில் விமான நிலையம் அமைய திட்டமிட்டுள்ள பகுதிகள் பெரும்பாலும் குடியிருப்புகளும், விவசாய விளைநிலங்களும், ஏராளமான நீர்நிலைகளும் நிறைந்த பகுதிகளாகும் என்பதால் அப்பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து திட்டத்தை கைவிட வேண்டும் அல்லது திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

தங்கம் தென்னரசு
அதனைத் தொடர்ந்து ஏகனாபுரம் உள்ளிட்ட மக்கள் பாதிக்காத வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகவும், மக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் தெரிவித்திருந்தார்.

டிட்கோ டெண்டர்
இந்நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயார் செய்ய தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) டெண்டர் கோரியுள்ளது. இந்த டெண்டரில், புதிதாக அமைய உள்ள விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து, விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு, வருவாய், மேம்பாட்டு பணிகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, திட்ட வரைபடம் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கோரப்பட்டுள்ளது.

வெளிப்படைத் தன்மை
ஒரு புறம் போராடும் மக்களிடம் கோரிக்கைகள் பரிசீலிக்கடும், மக்கள் பாதிக்காதவாறு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக்கூறிவிட்டு, மறுபுறம் அதற்கு மாற்றமான முறையில் திட்டத்திற்கான பணிகளை விரைந்து செயல்படுத்துவது என்பது மக்களை ஏமாற்றும் செயலாகும். ஆகவே, பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் தமிழக அரசு முழு வெளிப்படைத் தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி
போராடும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் வாழ்வாதாரத்தை காக்க போராடும் மக்களுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து துணை நின்று போராடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.