“செல்போனில் காவலர்கள் மூழ்கியுள்ளனர்..” நெல்லை கொலையை சுட்டிக்காட்டி நீதிபதிகள் வேதனை!
சென்னை: திருநெல்வேலியில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், போலீசார் செல்போனில் மூழ்கி கிடப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
கொலை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இன்று இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் பி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜே.ரவீந்திரன் மற்றும் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி சீல் வைக்கப்பட்ட அறிக்கையை நீதிபதிகளிடம் தாக்கல் செய்தனர்.

அதேபோல சம்பவத்தின்போது காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த வீடியோ காட்சிகளையும் அவர்கள் நீதிபதியின் முன்பு சமர்ப்பித்தனர். மேலும் ஏற்கெனவே மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில், அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் ஆய்வை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினர்.
இதனையடுத்து வீடியோவை பார்த்த நீதிபதிகள், "ஒரே ஒரு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மட்டுமே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடிக்க முயன்றிருக்கிறார். மற்ற காவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? எதற்காக கொலை நடந்தது என்பதை விட, கொலை நடந்த இடம்தான் கவலை அளிக்கிறது. நீதிமன்ற வளாகத்திலேயே இதுபோன்ற சம்பவம் நடந்தால், சாட்சியமளிக்க எப்படி வருவார்கள்? பணியில் இருக்கும் காவலர்கள், பணியைவிட செல்போனில் மூழ்கிக்கிடக்கின்றனர்" என்று வேதனை தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர், "இப்படி பொத்தாம் பொதுவாக அனைவரையும் குற்றம்சாட்டிவிட முடியாது. 90 சதவிகித காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர். குறிப்பாக கொரோனா தொற்று போன்ற பேரிடர் காலங்களில் காவல்துறையினர் தங்கள் உயிரை பற்றியும் கவலைப்படாமல் கடமையை செய்தனர்" என்று கூறினர். இக்கருத்தை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், பணியில் சிற்பாக செயல்படும் காவலர்களை பாராட்டுவதாக கூறினர்.
சம்பவம் நடந்த சமயத்தில் குற்றவாளியை மடக்கி பிடித்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் கொலை சம்பவத்தின்போது பணியில் இருந்த காவலர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநெல்வேலி காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மாவட்ட நீதிமன்றங்களில் நிரந்தரமாக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, இடைக்கால ஏற்பாடாக நீதிமன்றங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications