நெல்லையில் ஆளுநர் கையால் பட்டம் வாங்க மறுத்த மாணவியின் பின்னணி இதுதான்.. அண்ணாமலை அட்டாக்
நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் (nellai manonmaniam sundaranar university) பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி கையால் பட்டம் பெற மறுத்து துணை வேந்தரிடம் பட்டம் பெற்றுக்கொண்ட மாணவி ஜீன் ஜோசப், நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளராக இருக்கும் ராஜன் என்பவரின் மனைவி என்றும் கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் நாடகம் அரங்கேற்றுவதாகவும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.
திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழகத்தில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். தென் மாவட்டங்களில் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் ஏராளமான உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் 32 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

ஆளுநர் கையால் பட்டம் வாங்க மறுத்த மாணவி
இதில் தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர் என் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் 650 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டம் முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. பட்டமளிப்பு விழா மேடையில், தமிழ்நாடு ஆளுநர் மற்றும் துணைவேந்தர் என்.சந்திரசேகர் ஆகியோர் இருந்தனர். மாணவ - மாணவிகள் வரிசையாக தங்களது பட்டப்படிப்பு சான்றிதழை வாங்கி வந்தனர்.
மேடையில் தங்களுக்கு அளிக்கபப்ட்ட பட்டங்களை ஆளுநரிடம் கொடுத்து புகைப்படம் எடுத்தனர். அப்போது, ஆராய்ச்சி பட்டம் பெற வந்த நாகர்கோவிலைச் சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி ஆளுநரிடம் பட்டத்தை தராமல் நேரடியாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான சந்திரசேகரிடம் காட்டி வாழ்த்து பெற்று விட்டு மேடையில் இருந்து இறங்கினார். இது அங்கு சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்ணாமலை விமர்சனம்
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிராக ஆளுநர் செயல்படுவதால் அவரிடம் பட்டம் வாங்க விருப்பப்படவில்லை என்று அந்த மாணவி கூறினார். இந்த நிலையில், ஆளுநர் கையால் பட்டம் வாங்க மறுத்த மாணவியின் கணவர் திமுக பின்னணியை கொண்டவர் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் திரு. ராஜன் என்ற நபரின் மனைவி, திருமதி ஜீன் ஜோசப் என்பவர், ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார். காலகாலமாக, கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுகவின் கீழ்த்தரமான அரசியல்
திமுகவின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என, தனது கட்சியினருக்கு, முதல்வர் முக ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும். திமுகவைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம். அவர்களும் இதே போன்று நடந்து கொண்டால், முதல்வர் முக ஸ்டாலின் தனது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார்?" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications