சென்னை கொட்டிவாக்கம் வீட்டில் அவ்வளவு தங்கம்.. நேபாள வேலைக்கார தம்பதி பிளானை கேட்டு அதிர்ந்த போலீஸ்
சென்னை: சென்னை கொட்டிவாக்கத்தில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த 60 பவுன் தங்க நகைகளை போலீசார் ஒரு வழியாக மீட்டனர். இந்த நகைகள் மற்றும் பணத்தை திருடிய வழக்கில் வீட்டில் வேலையாட்களாக பணிபுரிந்த நேபாள நாட்டு தம்பதி போலீசில் எப்படி சிக்கினார்கள் தெரியுமா? லக்னோ, பெங்களூர் மற்றும் நேபாளம் நாட்டு எல்லை பகுதி வரை சென்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்தது எப்படி என்பதை பார்ப்போம்.
சென்னை லட்சுமண பெருமாள் நகர் 3-வது தெருவில் 60 வயதாகும் மகேஷ் குமார் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகேஷ் குமார் கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்து குல தெய்வ வழிபாட்டுக்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கத்துக்கு சென்றுள்ளார்.

பின்னர் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ந்து போனார். இது தொடர்பாக நீலாங்கரை போலீசில் மகேஷ்குமார் புகார் அளித்தார். மேலும் தனது வீட்டின் பணியாட்களான நேபாள நாட்டை சேர்ந்த ரமேஷ் மானசாகி, அவரது மனைவி பினிதா சாகி ஆகியோர் மாயமாகி விட்டதால் அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறினார்.
இதையடுத்து நீலாங்கரை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசாரின் விசாரணையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் பணியில் சேர்ந்த நேபாள நாட்டை சேர்ந்த ரமேஷ் மானசாகி, அவரது மனைவி பினிதா சாகி ஆகியோர் கொள்ளையடித்தது உறுதியானது.
இதையடுத்து தனிப்படை போலீசார் லக்னோ, பெங்களூரு மற்றும் நேபாளம் நாட்டு எல்லை பகுதிகளுக்கு சென்று விசாரித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை அண்ணா நகர் சாந்தி காலனி சந்திப்பில் நேபாளத்தைச் சேர்ந்த ரமேஷ் மானசாகி (22) அவரது மனைவி பினிதா சாகி (21) ஆகியோர் பதுங்கி இருப்பது உறுதியானது. போலீசில் பிடிபட்ட ரமேஷ் மானசாகி கூறும் போது, எங்களுடன் நேபாளத்தைச் சேர்ந்த சில நண்பர்கள் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் பெரிய பங்களாக்கள் மற்றும் வீடுகளில் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். அவர்கள் வீட்டில் யாரும் இல்லாத போது திருடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அதே பாணியில் நாங்கள் வேலை செய்த மகேஷ்குமார் வீட்டில் அவர் வெளியூர் சென்ற நேரம் பார்த்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடினோம். நேபாள நாட்டுக்கு உடனே சென்றால் போலீசார் எல்லையில் வந்து பிடித்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் அண்ணா நகரில் பதுங்கி இருந்தோம். ரயில் மூலமாக நேபாள நாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிட்டோம்.. ஆனால் போலீசார் எங்களை பிடித்து விட்டனர். இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து நேபாள தம்பதியிடம் இருந்து 60 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை மீட்டார்கள். கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.












Click it and Unblock the Notifications