ராமர் கோயில் கும்பாபிஷேகம்! வீடியோ வெளியிட்ட பாடகி கே.எஸ்.சித்ரா! குவியும் கண்டனங்கள்! என்ன நடந்தது?
சென்னை: ராமர் கோயில் கும்பாபிஷேக தினத்தன்று அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி வைத்து ராம மந்திரத்தை உச்சரியுங்கள் என பாடகி சித்ரா பதிவிட்ட வீடியோ பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் 12.20 மணிக்கு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த நாளில் அயோத்தியில் ரயில்கள்,பேருந்துகள் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு 100 மீட்டருக்கும் போலீஸ் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அயோத்திக்கு செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்குள்ளாக்கப்படுகிறது.
அயோத்தியில் மட்டும் சுமார் 13 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முக்கிய தருணத்தை பெரும்பாலானோர் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தேசிய விருது பெற்ற பாடகி கே.எஸ்.சித்ரா அயோத்தி குறித்து அண்மையில் இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்ட் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அன்றைய தினம் வீடுகளில் 5 அகல்விளக்குகளை ஏற்றி வழிப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள சித்ரா, இறுதியில் சமஸ்தா சுகினோ பவந்து என சமஸ்கிருதத்தில் கூறியிருந்தார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சித்ராவுக்கு எதிராக பாடகர் சூரஜ் சந்தோஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் இன்னும் எத்தனை அடையாளங்கள் அழிக்கப்படும். சித்ரா போன்ற எத்தனை முகங்கள் வெளிவரும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
வரலாற்றை சவுகரியமாக மறந்துவிட்டு உலகில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதை போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எல்லாம் சகிப்புத்தன்மையின்மை உச்சத்தில் உள்ளதாக நடிகையும் தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினருமான குஷ்பு பதிவிட்டுள்ளார். மேலும் தான் முழுமையாக சித்ராவுடன் நிற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
சித்ராவை விமர்சிப்பவர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி முரளிதரன், ராமர் கோயில் விழாவின் போது ராம மந்திரத்தை உச்சரிக்க வேண்டும், வீடுகளில் அகல் விளக்கு ஏற்றப்பட வேண்டும் என சித்ரா கூறியதில் என்ன தவறு என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications