தஹி சர்ச்சைக்கு க்யூட்டா பொருந்திய ராகுல் ‘தயிர்’ வீடியோ! - தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்
சென்னை: கடந்த சில நாட்களாகவே 'தயிர்' தான் தமிழ்நாட்டின் ஹைலைட் நியூஸ். தமிழ்நாட்டில் விற்பனையாகும் ஆவின் மற்றும் கர்நாடகாவின் விற்கப்படும் நந்தினி ஆகிய தயிர் பாக்கெட்டுகளில் "தஹி" என்ற ஹிந்தி வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என சில நாட்கள் முன்னதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்திருந்தது.
அதாவது, கன்னடத்தில் மோசரு மற்றும் தமிழின் தயிர் போன்ற வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக தஹி என்று வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியதால் தமிழ்நாடே பரபரப்பானது. வேண்டும் என்றால் அடைப்புக்குறியில் தமிழ் மற்றும் கன்னட சொற்களைப் பயன்படுத்தலாம் என்று அந்த சுற்றறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் பலர் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர். குறிப்பாக சட்டமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பொன்முடி, "தயிருக்கு தஹி என்று போட வேண்டும் என்கிறார்கள். நாளை சாப்பாட்டுக்குக் கூட கானா ஹயா ஹே என்பார்கள். முதல்வரின் எதிர்ப்பால் அதை வாபஸ் பெற்றுள்ளனர். இதிலேயே மொழியைத் திணிக்க விரும்புவோர் மற்ற இடங்களில் சும்மாவா இருப்பார்கள்" என்று கூறி இருந்தார்.
இதுகுறித்து பால்வளத் துறை அமைச்சர் நாசர் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தயிர் பாக்கெட் மீது தஹி என இந்தியில் அச்சிடப்படாது. மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உத்தரவைத் தமிழக அரசு ஏற்கவில்லை எனத் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருந்தார்.

இறுதியாக இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின், "தஹி குறித்து ஒரு எதிர்க் கருத்தை வெளியிட்டிருந்தார். அதில் எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! #StopHindiImposition குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்" என்று மிகக் காட்டமாக அவரது எதிர்ப்பை காட்டி இருந்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், "இந்தியை இந்தியாகவே திணித்தால் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதால், இந்தி சொற்களைத் தமிழில் எழுதித் திணிக்க நடுவண் அரசு முயற்சிப்பதாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகக் கல்வி நிறுவனங்கள், வானொலிகள், பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள் ஆகியவை வழியாக இந்தியைத் திணிக்க முயன்று வரும் மத்திய அரசு, இப்போது தமிழ்நாடு அரசின் நிறுவனமான ஆவின் மூலமாகவே இந்தியைத் திணிக்கத் துடிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. எந்த வழிகளில் இந்தியைத் திணிக்க நடுவண் அரசு முயன்றாலும் அதை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள்" என்று கூறியிருந்தார்.

இதனிடையே சமீபத்தில் மத்திய உணவு தரக் கட்டுப்பாட்டு நிறுவனம், ஆவின் தயிரில் தஹி என்று இந்தியில் அச்சிடத் தேவையில்லை. தயிரை மொசுரூ, ஜாமூத் டவுத், பெருகு, தயிர் என எப்படி வேண்டுமானாலும் அச்சிட்டுக் கொள்ளலாம் என்று கூறி, பழைய அறிவிக்கையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.
இந்நிலையில், இந்தத் தயிர் சர்ச்சையின் நடுவே ராகுல்காந்தியின் பழைய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. ராகுல் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 'பாரத் ஜோடோ யாத்ரா' எனும் இந்திய ஒற்றுமை பயணத்தைக் கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம் முன்பாக தொடங்கினார். அந்தப் பயணத்தின் வழியே அவர், 'விலேஜ் குக்கிங் சேனல்' குழுவினரைச் சந்தித்து அவர்களுடன் சமையல் செய்தார். அப்போது அவர் செய்முறை விளக்கத்தைப் பார்வையாளர்களுக்கு விளக்கி தமிழில் கூறினார். அச்சமயம் அவர் பயன்படுத்திய 'தயிர்' என்ற சொல்தான் இப்போது வைரலாக மாறி இருக்கிறது.

நெட்டிசன்கள் பலரும் அவர் உரக்க 'தயிரு' என அழுத்திச் சொல்லும் பகுதியை மட்டும் வெட்டிப் போட்டு வைரலாகி வருகின்றனர். மேலும் அந்த வீடியோ பதில் தங்களது ஹிந்து எதிர்ப்பையும் பதிவிட்டு வருகின்றனர். இதில் பல பத்திரிகையாளர்களும் கருத்திட்டு உள்ளனர் என்பது ஹைலைட்.
எழுத்தாளர் பா.ஜீவசுந்தரி ஃபேஸ்புக் பதிவில், "கர்நாடகம், தமிழ் நாட்டில் தயிரில் ஆரம்பித்தாயிற்று இந்தி அதிகாரம்...இனி படிப்படியாய் பால், மோர், ஐஸ்க்ரீம் என வளருமோ.... !" என்று கேட்டுள்ளார். இவரைப்போலவே பத்திரிகையாளர் எம்.பி. உதயசூரியன், "பால் ஊத்தி முடிச்ச கதைக்கு, நைஸா ஆவின் பால் மூலமா பால் வார்க்கப் பாக்குறீங்களே...நடக்குமா" எனக் கேள்வி எழுதி விமர்சித்துள்ளார்.

அதேபோல் பத்திரிகையாளர் விஜயசங்கர் ராமச்சந்திரன், "தயிரை பாக்கெட்டுக்குள்ளே போடலாம். பிராக்கெட்டுக்குள்ள போட்டா கொட்டிடும் ஜீ!. இந்த தயிர் வடை தேசியன்கள் எப்படியெல்லாம் நம்மை யோசிக்க வைக்கிறானுங்க பாருங்க!" என விமர்சித்திருக்கிறார்.
மருதூர் அரங்கராசன் சண்முகம், "தமிழ்நாட்டில் - ஆவின் தயிர்ப் பாக்கெட்டுகளில் இப்போது உள்ளது போலவே 'தமிழ் - ஆங்கிலம்' ஆகிய இரு மொழிகளில் மட்டும் அச்சிட்டால் போதும். நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்தியைத் திணித்தால் இந்திக்கு எதிரான மாநிலங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்

சக்தி குமரன் என்பவர், ராகுல் யூடியூப் சமையலுக்காகச் சொன்ன, 'வெங்காயம், தயிர்,கல்லுப்பு' வார்த்தைகளைப் பயன்படுத்து கருத்திட்டுள்ளார். திமுகவைச் சேர்ந்த ஆனந்த், ராகுலின் தயிர் வீடியோவை போட்டு "நாங்க ஏன்டா இந்தில சொல்லனும்..தமிழ்ல தான் சொல்லுவோம்" என எழுதியுள்ளார்.
சாலமன் என்பவர், "அடேய் உங்க கிட்ட பாணி பூரி, தஹி பூரி, பேல் பூரி வாங்கி தின்னதுக்கு எங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...இருங்கடா டேய்... நாளைல இருந்து "தயிர் வடை, தட்டு வடை, காரப் பொறி" வாங்கி திங்குறேன்..." எனக் கிண்டலடித்திருக்கிறார்.

போடிப்பட்டி ஸ்ரீதர் ஹரிதாஸ் என்பவர் அவரது ட்விட்டர் பதிவில், "ராகுல் காந்தி தகுதி நீக்கம் குறித்து கருத்து தெரிவிக்காத ஒரே கட்சி அதிமுக. தயிர் என்பதற்குப் பதில் தஹி என்ற இந்தி திணிப்பிற்கு எதிராகக் குரல் கொடுக்காத ஒரே கட்சி அதிமுக" என விமர்சித்துள்ளார்.
திராவிட தமிழன், "தயிரு . ராகுல் காந்தி விவகாரம் தங்களுக்கு எதிராக தீவிரமாக போவதை கண்ட பிராடு கூட்டம் அதை திசைதிருப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளது . எதை செய்தால் மக்களிடம் வேகமாக பரவும் என்று நன்கு திட்டமிட்டு தயிர் விவகாரத்தில் இறங்கியுள்ளது சங்கிகள் கூட்டம்" எனக் குறிப்பிட்டு ராகுலின் தயிர் வீடியோவை இணைத்துள்ளார்.
ஃபேஸ்புக்கில் ஷோகத் ஹுசைன் (Showketh Hussain) என்பவர், "தயிரை #தயிர் என்றும் அழைப்போம்; #தயிரு என்றும் அழைப்போம்...! #தஹி என்றழைக்கவே மாட்டோம்...!! நேருஜீயின் கொள்ளுப் பேரனையே #_தயிரு என்று அழைக்க வைத்த பூமிடா இது...!!! உன்னோட மொழித்திணிப்பு கூந்தலை வேறெங்காவது வைத்துக் கொள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவர் மற்றொரு பதிவில், "எங்கள் தாய்மொழியைத் தள்ளி வைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்!. மக்களின் உணர்வுகளை தியுங்கள். #StopHindiImposition.
"குழந்தையைக் கிள்ளி விட்டு சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம், தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்து விடுவீர்கள்" என்று தயிர் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தையைப் பயன்படுத்தக் கூறும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். (தயிர் பாக்கெட்டில் "தஹி" என ஹிந்தியில் அச்சிட வலியுறுத்தும் ஒன்றிய அரசின் அறிக்கைக்குக் கண்டனம்) #தஹி என இந்தியில் எழுதச் சொன்னதும், தமிழ்நாடு தகிக்கிறது...!" என்றும் கூறியுள்ளார்.

இவரைப்போலவே சீனுவாசன் அண்ணாமலை என்பவரும் இதே ராகுல் தயிர் வீடியோவை ஷேர் செய்துள்ளார். சுரா மகேஷ் என்பவர், "பரம்பரை #இந்தி காரரையே #தயிரு ன்னு சொல்ல வச்ச ஊருடா இது" என குறிப்பிட்டு ராகுல் வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்.
ட்விட்டரில் நிரஞ்சன் குமார், 'தயிரை தயிர் என அழைக்கலாம் தயிரு என்றும் அழைக்கலாம்!' என்று குறிப்பிட்டு ராகுலின் தயிர் வீடியோவை பதிவிட்டுள்ளார். இவரது இந்த வீடியோவை சுமார்106.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும் 2,953 லைக்ஸ் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications