கமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்.. பேசாமல் இப்படி செய்யலாமே!
கமல்ஹாசன் குறிப்பிட்ட தொகுதிகளை தேர்ந்தெடுத்து போட்டியிடலாமே?
Recommended Video

சென்னை: மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவரது கூட்டணிக்கு யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்ற விவரம் இன்னும் வெளியே வராமலேயே உள்ளது.
விஜயகாந்த் அவருடன் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது. பாரிவேந்தர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிலும் பிரயோஜனம் இல்லாமல் ஆகிவிட்டது.
கம்யூனிஸ்ட்களை கமல் கூப்பிட்டு பார்த்தார். ஆனால் ஏற்கனவே திமுக கூட்டணியில் இடம்பெறுவதாக சொல்லிவிட்டோம், அதனால் நண்பர்களாக இருப்போம் என்று சொல்லிவிட்டனர். அதனால் அவர்களுடனும் வாய்ப்பில்லை.

நிறைய வாய்ப்பு
இதில் வேறு யாராவது கமலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளார்களா என தெரியாது. அப்படியே வந்தாலும் வலுவில்லாத, பலமில்லாத கூட்டணியாகவே அது இருக்க நிறைய வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் பிரதான கட்சிகள் எல்லாம் மற்ற கூட்டணிகளில் ஐக்கியமாகி விட்டன.

சீமானுடன் சேருவாரா?
நிச்சயம் ஆம் ஆத்மி கமலுடன் இணையும். அவர்களுடன் சேர்ந்துதான் கமல் களமிறங்குவார் என்று தெரிகிறது! இப்படி தனித்து போட்டி என்பது லேசுபட்ட காரியம் இல்லை. இதைதான் சீமானும் சொன்னார், செய்தார், ஆனால் சோபிக்க முடியவில்லை. ஆனால் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான மாற்றத்தை உருவாக்க முடியும்.

40 தொகுதிகள்
ஆனால் நமக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது. கட்டாயம் 40 தொகுதிகளிலும் போட்டியிட்டே ஆக வேண்டும் என்று வழக்கமான அரசியல் கட்சிகளைப் போல இல்லாமல், கமல், 40 தொகுதிகளிலும் போட்டி என்பதற்கு பதிலாக குறிப்பிட்ட தொகுதிகளை தேர்ந்தெடுத்து போட்டியிட்டால் நன்றாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.

கூட்டணி எதற்கு?
இது ஒன்றும் சட்டசபை தேர்தல் இல்லை, எம்பி தேர்தல்தான். இந்த எம்பி தேர்தலுக்கே தேசிய கட்சிகளான காங்கிரஸ் 10, பாஜக 5 சீட்டுகளை வாங்கி களமிறங்குகிறார்கள் என்றால், அதுதான் தமிழகத்தின் யதார்த்தம். இதைதான் கமலும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் தேசிய கட்சிகளாக இருந்தும் இவை எல்லாம் தனித்து போட்டியிடாமல் கூட்டணியில் ஏன் இங்குவந்து விழுந்து கிடக்க வேண்டும்?

கிராமப்புற மக்கள்
சட்டசபை தேர்தல் என்றால்கூட பரவாயில்லை, ஒருவேளை உள்ளாட்சி தேர்தலா? சொல்லவே தேவையில்லை. கமல் தைரியமாக, தாராளமாக துணிந்து நிற்கலாம். அதற்கு அவருக்கு நிறையவே அனுகூலமான சாத்தியக்கூறுகள் உள்ளன. கண்டிப்பாக கிராமப்புற மக்களின் பல்ஸ் மற்றும் மன ஓட்டத்தை நன்கு அறிந்து வைத்துள்ளதால், கமலுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகவே கிடைக்கும்.

வெற்றி நிச்சயம்
ஆனால் இது எம்பி தேர்தல்தான். இதற்கு ஒட்டுமொத்த தொகுதிகளிலும் தனித்து நின்று, கைகாசு செலவு செய்து, பெரும்பாலான இடங்களில் தோல்வியை தழுவுவதைவிட, குறிப்பிட்ட தொகுதிகளை கமல் தேர்ந்தெடுக்கலாம். அந்த தொகுதிகளிலும் சீமானுடன் கை கோர்த்து செயல்பட்டால், அதிமுக, திமுக வாக்குகள் பிரிவதுடன், குறிப்பிட்ட ஓட்டு வங்கியை பெற்றுவிடலாம். மய்யமாக நின்று யோசித்துப் பார்ப்பார்களா....!












Click it and Unblock the Notifications