ட்விஸ்ட்.. இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ‛பூஸ்ட்’.. புதிய நீதிக்கட்சி ஆதரவு..ஏசி சண்முகம் மாறியது ஏன்?
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் அதிமுகவுக்கு ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. முதலில் ஆதரவு மறுத்த நிலையில் தற்போது ஆதரவு வழங்கி உள்ளதன் பின்னணி தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முதலில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணி ஆதரவு கேட்டபோது புதிய நீதிக்கட்சி ஆதரவு வழங்க மறுத்தது. இந்நிலையில் தான் தற்போது இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக புதிய நீதிக்கட்சியின் நிறுவன தலைவர் ஏசி சண்முகம் அறிவித்துள்ளார். இது அதிமுகவுக்கு பலமாக பார்க்கப்படும் நிலையில் அவரது இந்த திடீர் மனமாற்றத்துக்கான காரணம் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் இறந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் 27 ம் தேதி நடைபெற உள்ளது. மீண்டும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. வேட்பாளராக மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தை இவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி உள்ளார்.
தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, அமமுக சார்பில் சிவபிரசாந்த், அதிமுக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் கேஎஸ் தென்னரசு, ஓ பன்னீர் செல்வம் அணி சார்பில் செந்தில் முருகன் உள்ளிட்டவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

96 பேர் மனுத்தாக்கல்
தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 1ம் தேதி தொடங்கியது. இவர்கள் அனைவரும் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். எடப்பாடி பழனிச்சாமி அணி வேட்பாளர் தென்னரசு கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமாரிடம் தாக்கல் செய்தார். இதில், 'இரட்டை இலை' சின்னத்தை ஒதுக்குவதற்கான படிவமும் இடம்பெற்றிருந்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் மொத்தம் 96 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இன்று மனுக்கள் பரிசீலனை
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று துவங்கி நடைபெற உள்ளது. பிப்ரவரி 10ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். அன்று மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, வரும் 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவு, இரட்டை இலை விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களால் ஓ பன்னீர் செல்வம் தரப்பு போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. அதேபோல் குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால் அமமுகவும் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

காங்கிரஸ்-அதிமுக போட்டி
இந்த தொகுதியில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் கூட நேரடி போட்டி என்பது காங்கிரஸ், அதிமுக இடையே தான் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஆதரவு செய்துள்ளன. அதேபோல் அதிமுக கட்சிக்கு பாஜக, தமாகா, புதிய தமிழகம் உள்பட அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் தான் தற்போது அதிமுகவுக்கு ஏசி சண்முகத்தின் புதிய நீதி கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

புதிய நீதிக்கட்சியும் ஆதரவு
இதுதொடர்பாக புதிய நீதிக்கட்சியின் நிறுவன தலைவர் ஏசி சண்முகம் தனது கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது; ‛‛ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியான பாஜக கட்சி ஆதரவு தரும் அதமுக வேட்பாளருக்கு பதிய நீதிக்கட்சியின் மாநில, மாவட்ட தொகுதி, பகுதி நிர்வாகிகள் அனைவரும் தனது முழு ஆதரவு தந்து வேட்பாளரை மாபெரும் வெற்றி பெற செய்யமாறு அனைவரையும் கேட்டு கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

மனம் மாறிய ஏசி சண்முகம்
முன்னதாக கடந்த மாதம் 22ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கோரி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல் இந்திரா உள்ளிட்டோர் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏசி சண்முகத்தை நேரில் சந்தித்தனர். புதிய நீதிக்கட்சி அதிமுக கூட்டணியில் இருக்கும் நிலையில், அதிமுகவுக்கே ஏ.சி.சண்முகம் ஆதரவு அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆதரவு வழங்க மறுத்தார். பாஜக இருக்கும் பக்கமே தான் இருப்பேன் என்று அவர் தெரிவித்து இருந்தார். அப்போதைய நிலவரப்படி களத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் என இரு அணியினர் போட்டியில் இருந்தனர். இதனால் ஏசி சண்முகம் அப்படி தெரிவித்து இருந்தார். இப்போது தேர்தல் களத்தில் எடப்பாடி பழனிச்சாமி அணி மட்டும் இருப்பதோடு, அவர்களுக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளதால் ஏசி சண்முகமும் அதிமுகவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications