யூடியூப் சேனலுக்கு லைக் போடுங்க..பணத்தை அள்ளலாம்..வலை விரித்த கும்பல்..லட்சங்களை இழந்த சென்னை மக்கள்
சென்னை: சென்னையில் யூடியூப் மூலமாக புது வித மோசடி ஒன்று அரங்கேறியுள்ளது. இதில் படித்த இளைஞர்கள் முதல் தொழில் அதிபர்கள் வரை பலரும் பணத்தை பறிகொடுத்து ஏமாந்து போயிருக்கிறார்கள். இந்த மோசடி எப்படி நடைபெற்றது என்ற விவரத்தை இங்கே பார்க்கலாம்.
மக்களிடையே இணையதளங்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து விட்டது. பணம் அனுப்புவது முதல் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது வரை தற்போது இணையம் மூலமே வாங்கிவிட முடிகிறது. மக்களிடையே இணைய பழக்கம் அதிகரித்து வருவதால் தற்போது மோசடி கும்பல்களும் புது புது ரூட்களில் ஆன்லைன் மோசடிகளை அரங்கேற்ற தொடங்கிவிட்டனர்.

செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பல லட்சம் பரிசு அனுப்புவதாக சொல்லி லிங்க் அனுப்பி அதன் மூலம் ஒருவரின் தகவல்களை திருடுவது.. பெரும் தொகை பரிசு விழுந்து இருப்பதாகவும் அதை பெறுவதற்காக குறிப்பிட்ட தொகையை டெலிவரி சார்ஜ் ஆக கட்ட வேண்டும் என்றும் போனில் அழைத்து பேசி பணத்தை கறப்பது என வித விதமாக ஏமாற்றி வருகின்றனர்.
மக்களும் சிலர் அதிக பணம் கிடைக்கிறதே என்ற ஆசையில் யோசிக்காமல் அவர்களின் வலையில் விழுந்து ஆயிரக்கணக்கில் மட்டுமின்றி சிலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து அல்லோலப்படுகின்றனர். இந்த நிலையில், யூடியூப் மூலமாக புது வித மோசடி ஒன்று சென்னையில் அரங்கேறியுள்ளது. இதில் படித்த இளைஞர்கள் முதல் தொழில் அதிபர்கள் வரை பலரும் பணத்தை பறிகொடுத்து ஏமாந்து போயிருக்கிறார்கள். இந்த மோசடி எப்படி நடைபெற்றது என்ற விவரத்தை இங்கே பார்க்கலாம்: -
மோசடி கும்பல் யூடியூப் லிங்கை அனுப்பி இதனை லைக் மட்டும் செய்யுங்கள்.. உங்களுக்கு குறிப்பிட்ட அளவு தொகை கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதனை நம்பி பலரும் லைக் செய்து இருக்கிறார்கள். அதன்பிறகு அவர்களிடம் டெலிகிராம் குரூப் ஒன்றை தொடங்கி, உங்களை குரூப் லீடர் ஆக்கியிருக்கிறோம். இதில் பணம் செலுத்தினால் அதிக அளவு வட்டி கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இதனை நம்பி பலரும் துவக்கத்தில் பணம் கட்டியிருக்கிறார்கள். குறைந்த தொகை என்பதால் முதலில் வட்டியை கொடுத்து இருக்கிறார்கள். இதனால் பலரும் நம்பிக்கையில் அடுத்தடுத்து ஆயிரங்களையும் லட்சங்களையும் கொடுத்து இருக்கிறார்கள். சென்னையை சேர்ந்த தொழில் அதிபர்கள், பொறியாளர்கள் என பலரும் இந்த மோசடியில் சிக்கி பணத்தை இழந்து இருக்கிறார்கள்.
முதலில் பணம் சரியாக கிடைத்ததால் பலரும் பணம் கட்ட்டியிருக்கிறார்கள். கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவர் 30 லட்சத்தையும், தொழில் அதிபர் ரூ.1 கோடிக்கு மேலும் பணத்தை கட்டி ஏமாந்து போயிருப்பதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. முதலில் குறைந்த பணத்திற்கு வட்டியை சரியாக கொடுத்து வலையை விரித்து இருக்கிறார்கள் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள்.
அதன்பிறகு பலரும் அதிக தொகையை கொடுத்த போது மொத்தமாக பணத்தை சுருட்டி டிமிக்கி கொடுத்து இருக்கிறார்கள். பலரும் கடன் வாங்கி பணத்தை முதலீடு செய்து ஏமாந்து போயிருப்பது தெரியவந்துள்ளது. பலரும் போலீசில் புகார் செய்யாமல் இருக்கிறார்களாம். போலீசார் இது குறித்து கூறுகையில், ஆன்லைனில் அதிக வட்டி தருவதாக கூறுபவர்களை நம்ப வேண்டாம் எனவும் தேவையற்ற சாட்டிங்குகளை தவிர்த்தாலே இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பி விடலாம்' என்றும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications