அப்பாவி மக்கள் தான் டார்கெட்! புதிய டெக்னிக்கில் மோசடி.. இப்படி கால் வந்தால் அலர்ட்.. போலீஸ் அட்வைஸ்
சென்னை: செல்போனில் திடீரென வரும் அறிமுகம் இல்லாத அழைப்புகளை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்றும், ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற முக்கியமான தனிப்பட்ட தகவல்களை, பெறுநரின் சட்டப்பூர்வத் தன்மையை உறுதி செய்யும் வரை வழங்கக்கூடாது என்றும் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத அப்பாவி பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது எனவும் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் வெளியிட்ட அறிவுறுத்தல் வருமாறு:-

தகவல் தொழில்நுட்பத்துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதை மையப்படுத்தி சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. தற்போது கூரியரில் போதைப் பார்சல் கடத்துவதாக கூறி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த மோசடியில் தனியார் கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக ஒரு மோசடி நபர், சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு இல்லாத அப்பாவி நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசுகிறார்.
மும்பை காவல்துறை அதிகாரி போல: அப்பாவி நபர் பெயரில் போதைப்பொருள் பார்சல் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு வந்திருப்பதாகவும், அந்த பார்சலை மும்பை காவல்துறையினர் பறிமுதல் செய்திருப்பதாகவும் கூறி, மும்பை காவல்துறை அதிகாரியிடம் பேசுமாறு கூறி கான்பரன்சிங்கில் இணைக்கிறார்.
மும்பை காவல்துறை அதிகாரி என பேசும் மற்றொரு மோசடி நபர், சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை என்ற பெயரில் மறைமுகமாக மிரட்டுகிறார். சம்பந்தப்பட்ட நபர், அந்த பார்சலை தான் அனுப்பவில்லை என்றும், தன்னுடைய ஆதார் அடையாள அட்டை, வங்கிக்கணக்குகள் பண மோசடி வழக்குகளில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கிறார். அதை ஏற்பதாக, மும்பை காவல்துறை அதிகாரி தெரிவிக்கிறார்.
பணப்பரிவர்த்தனை செய்ய கூறுகிறார்: அதேவேளையில் அந்த மோசடி நபர், சம்பந்தப்பட்ட நபரிடம் ரிசர்வ் வங்கி அதிகாரியை தொடர்பு கொண்டு அவரது வங்கி கணக்கை மோசடிக்கு பயன்படுத்தவில்லை என்பதையும் வங்கி கணக்கை புதுப்பித்துக்கொள்ளுமாறு கூறுகிறார்.
இதையடுத்து ரிசர்வ் வங்கி அதிகாரி என பேசும் அந்த நபர், பாதிக்கப்பட்ட நபரின் வங்கி கணக்கு விவரம், பணபரிமாற்ற விவரம் உள்ளிட்ட தகவல்களை கேட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவரின் கணக்குகளைப் பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளதா என்பதை ரிசர்வ் வங்கி கண்டறிவதற்காக சம்பந்தப்பட்ட நபர் பெரும் தொகையை குறிப்பிட்ட வங்கி கணக்கு மாற்றி பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என கூறுகிறார்.
அறிமுகம் இல்லாத அழைப்புகள்: இதை நம்பி அந்த நபர், அந்த வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்புகிறார். பணம் அந்த மோசடி நபரின் வங்கி கணக்குக்கு சென்றதும் செல்போனில் அதுவரை தொடர்புக்கொண்ட அனைத்து மோசடி நபர்களும் தங்களது இணைப்புகளை துண்டித்து, தங்களது செல்போன் எண்களை 'சுவிட்ச் ஆப்' செய்துவிடுகின்றனர்.
இந்த மோசடியில் பொதுமக்கள் சிக்காமல் இருக்க செல்போனில் திடீரென வரும் அறிமுகம் இல்லாத அழைப்புகளை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். சுய விவரங்களை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கேட்டால், அந்த நபர் அதிகாரப்பூர்வமான வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுகிறாரா, அந்த நபர் அந்த நிறுவனத்தில் பணிபுரிகிறாரா என்பதை சரிபார்க்க வேண்டும்.
ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரங்கள்: செல்போன் மூலமாகவோ, மறைமுகமாவோ வரும் அழுத்தத்தின் காரணமாக வங்கி கணக்கு விவரங்களையும், பணபரிமாற்றத்திலும் ஈடுபடக்கூடாது. ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற முக்கியமான தனிப்பட்ட தகவல்களை, பெறுநரின் சட்டப்பூர்வத் தன்மையை உறுதி செய்யும் வரை வழங்கக்கூடாது.
மோசடியில் சிக்கி பணத்தை இழந்துவிட்டால், சைபர் குற்றப்பிரிவை இலவச தொலைபேசி எண் 1930 மூலம் தொடர்புக்கொண்டு புகார் அளிக்கலாம். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது












Click it and Unblock the Notifications