மக்களே கவனம்..கூகுள் பே விற்கு பணம் அனுப்பி அரங்கேறும் நூதன மோசடி..காவல்துறை கொடுத்த அலர்ட்!
கூகுள் பே மூலமாக புது வித மோசடி ஒன்று அரங்கேறி வருவதாக காவல் துறை விழிப்புணர்வு விடுத்துள்ளது.
சென்னை: சமீப காலமாக சைபர் கிரைம் எனப்படும் இணைய வழி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. வங்கியில் இருந்து பேசுகிறோம் என்பதில் தொடங்கி பரிசு பொருட்கள் விழுந்து விட்டது என்பது வரை புது புது ஐடியாக்களை பின்பற்றி மக்களிடம் இருந்து வங்கிக் கணக்கு விவரங்களை மோசடி கும்பல் பெற்றும் பெரும் பண மோசடியில் ஈடுபடுகிறது. அந்த வகையில் தற்போது கூகுள் பே மூலமாக புது வித மோசடி ஒன்று அரங்கேறி வருவதாக காவல் துறை விழிப்புணர்வு விடுத்துள்ளது.
சைபர் கிரைம் எனப்படும் ஆன்லைன் மோசடி சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
புதுப் புது வழிகளில் நூதன யுக்திகளை கையாண்டு வங்கியில் இருந்து பணத்தை திருடும் முயற்சிகளில் இத்தகைய இணைய வழி மோசடி கும்பல் ஈடுபட்டு வருகிறது. தற்போது உணவு ஆர்டர் போடுவது முதல் அனைத்து பொருட்களையும் ஆன்லைனில் வாங்கி விட முடியும்.

புதுப்புது வழியில் பண மோசடி
மக்களிடம் இணைய வழியிலான பணப்புழக்கம் அதிகரித்து விட்டதால் மோசடி கும்பல்களும் இணைய பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி பணத்தை திருட புதுப்புது வழிகளை கையாண்டு வருகின்றனர். குறிப்பாக வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம் கார்டு விவரங்களை கேட்பது, பான் கார்டு, ஆதார் கார்டு அப்டேட் செய்து தருகிறோம் என வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டு அதன் மூலம் நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை தங்கள் கணக்கிற்கு மாற்றுவது என பல்வேறு வழிகளில் மோசடிகள் அரங்கேறி வருகின்றன.

தமிழக காவல்துறை எச்சரிக்கை
இந்த நிலையில், புதுவிதமான ஒரு மோசடி அரங்கேறி வருகிறது. வழக்கமான முறையின்றி தற்போது கூகுள் பே மூலமாக இந்த நூதன மோசடி அதிகரித்து வருகிறதாம். மக்களிடையே கூகுள் பே போன்ற யுபிஐ பயன்பாடு அதிகரித்து இருப்பதால் மோசடியாளர்கள் தற்போது இந்த புதுவிதமான மோசடியை கையில் எடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழக காவல்துறையும் தனது எச்சரிக்கையை விடுத்துள்ளது. தமிழக காவல்துறை கூறியிருப்பதாவது:-

உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும்
அதன்படி யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் வங்கிக் கணக்கிற்கோ அல்லது கூகுள் பேவிற்கோ பணம் அனுப்புவாராம். அதன்பிறகு சிறிது நேரத்தில் தொடர்பு கொண்டு பணத்தை உங்கள் கணக்கிற்கு தவறுதலாக அனுப்பி விட்டதாகவும் அதை திருப்பி அளிக்குமாறும் கூறுவாராம். அவர் கூறிய படி அவரது கணக்கிற்கு பணத்தை அனுப்பும் போது உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும். எனவே யாராவது உங்கள் கணக்கிற்கு தவறுதலாக பணம் அனுப்பியிருந்தால் அதை திருப்பி அனுப்பாமல் அந்த தொகையை கொண்டு சென்று காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.

பணமாக பெற்றுச் செல்லுமாறு
இந்த புதிய வகை மோசடி தற்போதுதான் தொடங்கியிருக்கிறதாம். இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், பணத்தை தவறுதலாக அனுப்பி இருப்பதாக கூறும் நபர்களை தங்களின் அடையாள சான்றுடன் வந்து அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு வந்து பணமாக பெற்றுச் செல்லுமாறு கூறுமாறும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மெசேஜில் இருந்த லிங்கை கிளிக் செய்து
கடந்த சில தினங்களுகு முன்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் வங்கியில் கே.ஒய்.சி விவரங்களை அப்டே செய்ய வேண்டும் என்று பலரது செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. தனியார் வங்கியில் இருந்து வந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்த அந்த மெசேஜை நம்பி சுமார் 40 வாடிக்கையாளர்கள், மெசேஜில் இருந்த லிங்கை கிளிக் செய்துள்ளனர். இந்த லிங்கை கிளிக் செய்த சில மணி நேரங்களில் வங்கிக் கணக்கில் இருந்து லட்ச கணக்கில் மோசடிகும்பல் திருடியுள்ளது. இப்படி நாள்தோறும் புதுவிதமாக மோசடிகளை சைபர் திருட்டு கும்பல் அரங்கேற்றி வருவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே சைபர் கிரைம் போலீசார் கூறும் அறிவுறுத்தலாக உள்ளது.












Click it and Unblock the Notifications