சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஜேசிபியுடன் வந்த அதிகாரிகள்.. காலையிலேயே இடித்து தள்ளப்பட்ட வீடுகள்
சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஒருவர் தனது வீட்டுக்கு பாதாள சாக்கடை இணைப்பை புதுப்பித்து தரவேண்டும் என மாநகராட்சியில் மனு அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, பாதாள சாக்கடை இணைப்பு பொருத்தக்கூடிய இடங்களில் எல்லாம் ஆக்கிரமிப்புகள் இருந்தது. அப்படி ஆக்கிரமித்த வீடுகளை எல்லாம் அதிகாரிகள் அதிரடியாக இடித்து அகற்றினார்கள். இதை கண்டித்து பொக்லைன் எந்திரத்தில் அமர்ந்து பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை அம்மணிஅம்மன் தோட்டம் 1-வது பகுதியில் தங்கராஜ் என்பவர் வீட்டில் பாதாள சாக்கடை இணைப்பில் சிக்கல் இருந்தது. இதையடுத்து தங்கராஜ் பாதாள சாக்கடை இணைப்பை புதுப்பித்து தரவேண்டும் என மாநகராட்சியில் கோரிக்கை மனு அளித்துள்ளார். அவரது மனுவை பரிசீலனை செய்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று என்ன சிக்கல் என்று பார்த்துள்ளனர். அப்போது பாதாள சாக்கடை இணைப்பு பொருத்தக்கூடிய இடங்களில் எல்லாம் ஆக்கிரமிப்புகள் இருந்திருக்கிறது.

நோட்டீஸ்
இதையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளில் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த ஜூன் 17ம் தேதி அன்று வந்துத நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருக்கிறார்கள். தொடர்ந்து நேற்று காலை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் புதுவண்ணாரப்பேட்டை அம்மணி அம்மன் தோட்டப்பகுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்றனர் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடித்து அகற்றினார்கள்.
த.வெ.க. பயிலகம்
அப்போது த.வெ.க. சார்பில் 'தளபதி விஜய் பயிலகம்' என்ற பெயரில் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கட்டிடத்தையும் ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்க முயன்றுள்ளனர். இதற்கு த.வெ.க. கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த கட்டிடத்தை இடிக்க விடமால் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அந்த கட்டிடத்தை இடிக்க ஒரு வாரம் கால அவகாசம் அளித்தனர். இதையடுத்து விஜய் பயிலகம் செயல்பட்ட கட்டிடத்தை மட்டும் மாநகராட்சி அதிகாரிகள் இடிக்காமல் விட்டு சென்றனர்.
பெண்கள் ஆத்திரம்
இதை கண்டு ஆத்திரம் அடைந்த அங்கிருந்த பெண்கள், பொக்லைன் எந்திரத்தை அங்கிருந்து எடுக்க விடாமல் அதன் மீது அமர்ந்து கொண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். த.வெ.க. பயிலக கட்டிடத்தை இடிக்க ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்ததுபோல் தங்களுக்கும் கால அவகாசம் கொடுத்திருக்கலாமே ஏன் இப்படிசட்டெனஒரே நாளில் இடித்தீர்கள் என்று கேட்டு முற்றுகை செய்தனர்.
இடித்தது ஏன்
மேலும் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் போலீஸ் பாதுகாப்புடன் வந்து எங்கள் வீடுகளை இடித்தது தவறு என்று கூறி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் பெண்கள் வாக்குவாதம் செய்தனர். பொக்கைலைன் எந்திரத்தின் முன்பு நகராமல் அமர்ந்த பெண்களை, அங்கிருந்த பெண் போலீசார், குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications