சென்னையில் விபரீதமான புத்தாண்டு கொண்டாட்டம்.. திடீரென வந்த ராட்சத அலை.. நொடியில் முடிந்த வாழ்க்கை
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு, கடற்கரையில் குளித்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் உள்பட 3 பேர் ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையில் கடற்கரையில் போலீசாரின் எச்சரிக்கையை மீறி குளித்து 3 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த இளைஞர் ராஜா. இவருக்கு 25 வயது ஆகிறது. கம்ப்யூட்டர் என்ஜினீயரான ராஜா சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருடய நண்பர்கள் தேனாம்பேட்டையை சேர்ந்த தாமோதரன் (26), வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தருண், தண்டையார்பேட்டையை சேர்ந்த ஹரிகரன் . இதில் தருண் மற்றும் ஹரிகரன் இருவரும் சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். தாமோதரன் டிசைனிங் படித்து வந்த மாணவர் ஆவார்.

இவர்கள் நான்கு பேரும் புத்தாண்டை கிழக்கு கடற்கரை சாலையில் கொண்டாட முடிவு செய்துள்ளனர் . இதன்படி டிசம்பர் 31ம் தேதி இரவில் கிழக்கு கடற்கரை சாலைக்கு வந்தனர். இரவு முழுவதும் கிழக்கு கடற்கரை சாலையில் புத்தாண்டை கொண்டாடிவிட்டு ஜனவரி 1ம் தேதி அதிகாலை 5 மணியளவில் உத்தண்டியில் உள்ள கடற்கரைக்கு போய் இருக்கிறார்கள். அங்கு வந்த அவர்களை போலீசார் எச்சரித்துள்ளனர். ஆனால் போலீசார் போன பின்னர், அவர்களின் எச்சரிக்கையை மீறி கடலில் இறங்கி குளித்தனர்.
அப்போது ராட்சத அலை அவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது. சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்க முயன்றனர். அதற்குள் ராஜா, தாமோதரன் இருவரையும் ராட்சத அலை கடலுக்குள் இழுத்து சென்றுவிட்டது. அதேநேரம் அக்கம் பக்கத்தினர் தருண், ஹரிகரன் ஆகியோரை பத்திரமாக மீட்டனர். கடலுக்குள் மாயமான ராஜா சிறிது நேரத்தில் அப்பகுதியில் பிணமாக கரை ஒதுங்கினார். மாயமான தாமோதரனை தேடினார்கள். நீண்டநேரம் கழித்து அவரது உடலும் கரை ஒதுங்கியது
இதுபற்றி தகவல் அறிந்து வந்த கானத்தூர் போலீசார், 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டை கொண்டாட வந்த சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்தவர் மதுசூதன ராவ் என்பவருடைய மகன் சம்பிரித் (16) அலையில் சிக்கி உயிரிழந்தார். சம்பரித் தடையை மீறி தனது நண்பர்களுடன் மெரினா கடலில் குளித்துள்ளார். அப்போது மாணவர்களில் 3 பேரை ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச்சென்றது. சகமாணவர்கள் கூச்சலிட்டதால் ரோந்து பணியில் இருந்த கடலோர போலீசார் கடலில் இறங்கி 2 மாணவர்களை மட்டும் பத்திரமாக மீட்டார்கள். ஆனால் சம்பிரித் மட்டும் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார்.
போலீசாரின் எச்சரிக்கையை மீறி கடலில் குளித்ததால் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.அதேநேரம் போக்குவரத்து போலீசாரின் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளால் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலை விபத்து உயிர் பலி சம்பவங்கள் இந்த ஆண்டு நிகழவில்லை .












Click it and Unblock the Notifications