சென்னை அருகே கணவன் கண் எதிரே துடிதுடித்து இறந்த புதுப்பெண்.. ஒரு நிமிடத்தில் முடிந்த வாழ்க்கை
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியை சேர்ந்தவர் நாகார்ஜுனா என்பவர் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சென்னை திருவேற்காடு, அயப்பாக்கம் சூரிய நாராயண நகரை சேர்ந்த விஸ்வ பிரியா என்பவருடன் கடந்த 45 நாட்கள் முன்பு தான் திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று கணவருடன் விஸ்வ பிரியா பைக்கில் வெளியே சென்ற போது, கண் இமைக்கும் நேரத்தில் அந்த துயரம் நடந்தது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியை சேர்ந்த 29 வயதாகும் நாகார்ஜுனா என்பவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த 45 நாட்களுக்கு முன்னர், நாகார்ஜுனாவுக்கும், சென்னை திருவேற்காடு, அயப்பாக்கம் சூரிய நாராயண நகரை சேர்ந்த விஸ்வ பிரியா (25) என்பவருக்கும் திருமணம் நடந்தது.

கடந்த அக்டோபர் 17ம் தேதி அன்று மாலை, தனது கணவருடன் சென்னை திருவேற்காட்டில் உள்ள தாய் வீட்டுக்கு விஸ்வ பிரியா சென்றார். இருசக்கர வாகனத்தில் பின்னால் விஸ்வ பிரியா அமர்ந்திருந்தார். நாகார்ஜுனா வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். இவர்களின் இரு சக்கர வாகனம் கவரைப்பேட்டை-சத்யவேடு சாலையில் குருவராஜா கண்டிகை சாலை சந்திப்பு அருகே செல்லும் போது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியது.
இதில் நாகர்ஜூனா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் இந்த விபத்து காரணமாக மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற புதுபெண் விஸ்வ பிரியா தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிக கவனமாக செல்ல வேண்டும். முடிந்தவரை இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் குடும்பத்துடன் நீண்ட நேர பயணம் என்பதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் இருசக்கர வாகனத்தில் நீண்ட தூர பயணம் என்பது விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாகும். பல்வேறு இருசக்கர வாகன விபத்துக்களை ஆராய்ந்து பார்த்தால், அது நீண்ட பயணமாகவோ அல்லது, இரவுநேர பயணமாகவோ இருக்கும். இந்தவிபத்து கூட நீண்ட தூர பயணம் ஆகும். கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கு மாலை நேரத்தில் வந்த போது ஏற்பட்ட விபத்து ஆகும். சிலரின் அஜாக்கிரத்தையும், ஒரு நிமிட கவனச்சிதறலும், ஒரு குடும்பத்தையே நிலைகுலைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications