"முள்ளை முள்ளால்".. மோடியின் வீழ்ச்சி "இவரால்"தான்.. பாஜகவை அகற்ற.. ஒருநாளாவது என்கூட வாங்க: வசீகரன்
ஆம் ஆத்மி கட்சி 2ம் கட்ட நடைபயணத்தை துவங்க போவதாக வசீகரன் அறிவித்துள்ளார்
சென்னை: வரும் எம்பி தேர்தலில், மக்கள் விரோத பாஜக ஆட்சியை அகற்றி, மக்களாட்சியை உண்மையான ஜனநாயக ஆட்சியை நேர்மையான ஆட்சியை டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் அமைத்தது போல் இந்திய அளவில் 2024-ல் உருவாக்கிட வலியுறுத்தி நடைபயணத்தை அறிவித்துள்ளது தமிழக ஆம் ஆத்மி கட்சி.
தமிழக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் வசீகரன்.. தொடர்ந்து கெஜ்ரிவாலின் குறிக்கோளையும், திட்டங்களையும், தமிழகத்தில் பரப்பி வருபவர்.
ஒருமுறை நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்கு வசீகரன் பேட்டி தந்திருந்தார்.. அப்போது, ஆளும் பாஜக குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

மத அரசியல்
அதற்கு வசீகரன் சொல்லும்போது, "பாஜகவின் அடுத்தடுத்த சறுக்கலுக்கு காரணம் மத அரசியல்தான்.. வெறுப்பு அரசியல் மக்களிடம் எடுபடவில்லை.. இனியும் எடுபடாது.. பாஜக எப்போதுமே, தங்களுக்கு கிடைக்கும் தேர்தல் தோல்விகளை வைத்து, ஒரு பாடமாக எடுத்து கொண்டு, சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.. அப்படி செய்தால்தான் அவர்கள் நல்ல நிலைமைக்கு வர முடியும்.. இல்லையென்றால் இந்தியா பூராவும் இப்படி ஒரு சூழலைதான் தொடர்ந்து சந்திப்பார்கள்.. மக்களின் வெறுப்புக்கும் ஆளாவார்கள்" கூறியிருந்தார்.

முள்ளை முள்ளால்
அதுமட்டுமல்ல, தமிழகத்தில் மக்கள் ஊழல் இல்லாத கட்சியை விரும்புகின்றனர். இந்தியாவிலேயே ஊழல் இல்லாத கட்சி ஆம் ஆத்மி கட்சி ஆகும். அதற்கு உதாரணமே பஞ்சாப் மற்றும் டெல்லி மாநிலங்கள்தான்.., தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சி முத்திரை பதிக்கும் காலம் வந்து விட்டது.. மக்கள் மாற்றத்தை விரும்புவதே அதற்கு முக்கிய காரணம்.. பாஜகாவின் எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாதவர் அரவிந்த் கெஜ்ரிவால்.. முள்ளை முள்ளால் எப்படி எடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்" என்றும் பெருமிதமாக சொல்லி வருபவர் வசீகரன்.

அவமானமா இருக்கு
சமீபத்தில்கூட, வேங்கைவயல் விவகாரம் குறித்து காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார்.. "வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை இதுவரையில் கண்டறிய முடியவில்லை என்பதால் அரசியல் பின்புலம் இருக்குமோ என்ற அச்சம் உள்ளது.. ஆனால், இது ஒரு அவமானமான செயல்.. குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அந்த ஊரில் உள்ள எல்லோருக்குமே அரசின் உதவி கிடைக்க வேண்டும். வேங்கைவயல் விவகாரத்தில் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.. விரைவாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்" என்று எச்சரித்திருந்தார் வசீகரன்.

மீண்டும் நடைபயணம்
இந்நிலையில், ஒரு நடைபயணத்தை தற்போது அறிவித்துள்ளார்.. மேக் இந்தியா நம்பர்1 என்ற கெஜ்ரிவாலின் முழக்கத்தை வலியுறுத்தி இரண்டாம் கட்ட நடைப்பயணத்தை, திருச்சியிலிருந்து வரும் 5-ம் தேதி தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரை செல்ல போகிறாராம்.. மக்கள் விரோத பாஜக ஆட்சியை அகற்றிட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இது தொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார் வசீகரன்.. அந்த அறிக்கை இதுதான்:

தண்டி யாத்திரை
"கடந்த 2020-ல் முதல்கட்ட நடைப்பயணம் சென்னையில் தொடங்கி திருச்சியில் முடிவடைந்தது. இந்த நடைப்பயணம் தேச ஒற்றுமை, மத நல்லிணக்கம், அரசியல் சாசன சட்ட பாதுகாப்பு வலியுறுத்தி என்னுடைய தலைமையில் நடைபெற்றது. 2022 நடைப்பயணத்தின் தொடர்ச்சியாக மீண்டும் வரும் 5-ம் தேதி மதியம் 2 மணியளவில் திருச்சி காந்தி மார்க்கெட் காந்தி சிலையின் அருகிலிருந்து (காந்தியடிகள் தண்டி யாத்திரை புறப்பட்ட இடம்) என்னுடைய தலைமையில் மீண்டும் நடைப்பயணம் தொடங்க உள்ளது.

பாஜக ஆட்சி
இந்த நடைப்பயணம் கெஜ்ரிவாலின் திட்டமான "மேக் இந்தியா நம்பர் 1" (உலக அரங்கில் இந்தியாவை முதன்மையானதாக மாற்றுவோம்) என்பதை வலியுறுத்தியும் அதோடு தேச ஒற்றுமை, மத நல்லிணக்கம், அரசியல் சாசன சட்டத்தை பாதுகாத்தல் மற்றும் டெல்லி மாநில ஆம் ஆத்மி கட்சி அரசின் சாதனைகளான கல்வி சுகாதாரம், வேலைவாய்ப்பு, மக்களின் அடிப்படை தேவைகளை வழங்கி வரும் வெற்றிகரமான கெஜ்ரிவால் ஆட்சியின் சாதனைகளை விளக்கவும் 2024 மக்களவை தேர்தலில் மக்கள் விரோத பாஜக ஆட்சியை அகற்றி மக்களாட்சியை உண்மையான ஜனநாயக ஆட்சியை நேர்மையான ஆட்சியை டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் அமைத்தது போல் இந்திய அளவில் 2024-ல் உருவாக்கிட வலியுறுத்தியும் மக்களை நோக்கி இந்த நடைப்பயணம் இந்த செல்கிறது.

500 கிமீ 15 நாட்கள்
இந்த நடைப்பயணத்திற்கு சாதி, மதம், இனம், அரசியல், மொழி பாகுபாட்டில்லாமல் இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம். "இந்திய தேசத்தை உலகில் முதன்மை நாடாக ஆக்குவோம்" என்ற கெஜ்ரிவாலின் முழக்கத்தை வலுப்படுத்திட இந்த "தேசம் காப்போம்" நடைப்பயணத்திற்கு அனைவரும் கருத்து வேறுபாடுகளை கலைந்து ஆதரவு தருவததோடு தயக்கமின்றி தேச வளர்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தோழர்களையும் தமிழக மக்களையும் அன்புடன் அழைக்கிறேன். கிட்டத்திட்ட 500 கிமீ 15 நாட்கள் நடக்க உள்ளேன். ஆம் ஆத்மி தோழர்கள் மற்றும் இந்தியாவில் 2024-ல் நல்லாட்சி விரும்பும் அன்பர்கள் ஒரு நாளாவது என்னுடன் நடக்க வர வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications