கவரப்பேட்டை ரயில் விபத்துக்கு சதி வேலை காரணமா? என்.ஐ.ஏ அதிகாரிகள் பரபர ஆய்வு!
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மைசூரிலிருந்து புறப்பட்ட பாகமதி எக்ஸ்பிரஸ் கவரப்பேட்டை வந்தடைந்த போது மெயின் லைனுக்கு பதிலாக லூப் லைன் வழித்தடத்தில் இயக்கப்பட்டதில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ஏதேனும் சதி வேலைகள் உள்ளதா என்.ஐ.ஏ அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நடந்த பகுதியில் காலையில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, என்.ஐ.ஏ அதிகாரிகள் ரயில்வே துறை அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து விபத்து நடந்த பகுதியில் ஒவ்வொரு இடமாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாதிரிகளை சேகரித்து உள்ளனர். மேலும், ரயில்வே அதிகாரிகளிடம் இந்த விபத்து தொடர்பான பல்வேறு விவரங்களை கேட்டு அறிந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு சுமார் 2,000 பயணிகளுடன் நேற்று காலை 10.30 மணிக்கு பாக்மதி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் வழியாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 90 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் நேற்று இரவு 8.27 மணி அளவில், திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.
இதில், அந்த ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டன. மேலும் ரயிலின் பார்சல் பெட்டியில் அடிப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் ரயில்வே அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே போலீஸார், ஆர்.பி,எஃப். போலீசார், பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. 19 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த ரயில் விபத்து காரணமாக 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், வழித்தட மாற்றம் செய்யப்பட்டும் உள்ளன. கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர், ரயில் விபத்துக்கான காரணங்கள் குறித்தும், சிக்னல், தொழில்நுட்ப கோளாறுக்கான காரணங்களை ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். மனிதத் தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமா கண்டுபிடிக்கப்பட்டு, அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விபத்துக்கான காரணம் என்ன என்பது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் இன்று காலை ஆய்வு மேற்கொண்டனர். பாக்மதி ரயில் லூப் லைனில் சென்றதே விபத்துக்கு காரணம் எனத தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. லைன் சிக்னல் கொடுக்கப்பட்டதும் ரயில் மெயின் லைனுக்கு செல்லாமல் லூப் லைனில் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது மீட்பு பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விபத்துக்கு சதி திட்டம் காரணமாக இருக்கிறதா? என்பது குறித்தும் ரயில் கவிழ்ப்பதற்கான சதி நடத்தப்பட்டதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
