இரவு நேர ஊரடங்கில் கொள்ளை முயற்சி.. தப்பியோடிய கொள்ளையனை 1 கி.மீ. தூரம் துரத்தி பிடித்த எஸ்ஐ!
சென்னை: இரவு நேர ஊரடங்கின்போது நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை 1 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்த ஆயிரம்விளக்கு காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட் கார்டன் சாலையைச் சேர்ந்த இரு சிறுவர்கள் கடந்த 22-ஆம் தேதி தொழுகைக்காக சைக்கிளில் ஜோசியர் தெருவிற்கு சென்றனர். பின்னர் தொழுகையை முடித்துவிட்டு சிறுவர்கள் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது இருவரும் உத்தமர் காந்தி சாலை வழியாக வரும் போது நம்பர் பிளேட் இல்லாத உயர்ரக பைக்கில் வந்த நபர் அவர்களை தனது இருசக்கர வாகனத்தால் இடித்துத் தள்ளினார்.

பொதுமக்கள்
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுவர்களை அந்த நபர் தாக்கினார். பின்னர் அவர்களிடமிருந்து தங்க நகை, வாட்ச், செல்போன் ஆகியவற்றை தருமாறு மிரட்டியுள்ளார். அப்போது பொதுமக்கள் வருவதை கண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பினார்.

வீட்டுக்கு வந்த சிறுவர்கள்
பின்னர் வீட்டிற்கு வந்து சிறுவர்கள் அங்கு நடந்த விஷயத்தை தனது சகோதரரான துல்கிபலிடம் கூறினர். உடனே சகோதரர் காரில் இரு சிறுவர்களை ஏற்றிக் கொண்டு கொள்ளையனை தேடினார். அப்போது அந்த கொள்ளையன் தேனாம்பேட்டை மருத்துவமனை அருகே நின்றிருப்பதை கண்டு அவரை துரத்திச் சென்றனர்.

மீண்டும் தப்பியோட முயற்சி
உடனே இரு சக்கர வாகனத்தில் தப்பியோட முற்பட்டார். அவரை விரட்டிச் சென்ற அந்த சகோதரர் ஆயிரம்விளக்கு மசூதி அருகே இரு சக்கர வாகனத்தை மோதியதில் கொள்ளையன் கீழே விழுந்து எழுந்து மீண்டும் தப்பயோடினார்.

இரு சக்கர வாகனம்
இதையடுத்து அங்கு இரவு நேர முழு ஊரடங்கு ரோந்து பணியில் இருந்த ஆயிரம் விளக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகாஷிடம் நடந்தவற்றை சிறுவர்கள் கூறியுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தை கொள்ளையர் எடுக்க முயன்ற போது உதவி ஆய்வாளர் பிரகாஷ், தலைமைக் காவலர் சாமுன், காவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் துரத்தினர்.

நகைப்பறிப்பு சம்பவங்கள்
அப்போது அனைவரையும் தள்ளிவிட்டுவிட்டு தப்பியோடினார். உடனே பிரகாஷ் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை துரத்தி சென்று மடக்கிப்பிடித்தார். அதன்பிறகு அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அஜித் என்கிற முனுசாமி என தெரியவந்தது. மேலும் போலீஸ் பிடியில் சிக்குவதற்கு சற்று நேரத்திற்கு முன் திருவல்லிக்கேணி மற்றும் பூக்கடை பகுதிகளில் நகைப் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

பாராட்டுகள்
பின்னர் சிறுவர்களிடமும் நகைப் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அஜித்தை கைது செய்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அது மட்டுமல்லாமல் அஜித் வைத்திருந்த நகைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தார். கொள்ளையனை மடக்கிப் பிடித்த பிரகாஷுக்கு பாராட்டுகள் குவிகின்றன.












Click it and Unblock the Notifications