நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில வாரங்களாகப் பல்வேறு புதிய நோய் பாதிப்புகள் அடுத்தடுத்துக் கண்டறியப்பட்டு வருவது தமிழக எல்லையோரப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் முதலில் 'ஷிகெல்லா' (Shigella) பாக்டீரியா தொற்றுப் பரவல் அதிகரித்து வந்த நிலையில், தற்போது'நிபா வைரஸ்' (Nipah Virus) பாதிப்பும் அங்கு தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

குறிப்பாகக் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு - கேரளா மாநிலங்களுக்கு இடையிலான தினசரிப் பயணங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ள சூழலில், கேரளாவில் ஏற்படும் இந்த தொடர் நோய் பரவல்கள் தமிழ்நாட்டுக்கு புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

Nipah Virus

சுகாதாரத் துறை அதிரடி உத்தரவு!

கேரளாவில் நிபா வைரஸ் அச்சுறுத்தல் எழுந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை மாநிலம் முழுவதும், முக்கியமாக எல்லையோரப் பிராந்தியங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திருப்பூர் ஆகிய கேரளாவுடன் நேரடியாகத் தொடர்புடைய எல்லை மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்புப் பணிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

கேரளாவிலிருந்து தமிழக எல்லைக்குள் நுழைபவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துமாறும், ஏதேனும் நோய்க்கான அறிகுறிகள் தென்படுகிறதா என்பதைச் சோதனைச் சாவடிகளிலேயே துல்லியமாகக் கண்காணிக்குமாறும் தமிழக பொதுச் சுகாதாரத் துறை மருத்துவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வவ்வால்களிடமிருந்து பரவும் நிபா

நிபா வைரஸ் என்பது விலங்குகளிடமிருந்து, குறிப்பாகப் பாதிக்கப்பட்ட பழந்தின்னி வவ்வால்கள் மற்றும் பன்றிகள் போன்றவற்றிலிருந்து மனிதர்களுக்கு மிக வேகமாகப் பரவக்கூடிய ஒரு கொடிய தொற்று நோயாகும்.

இந்த வைரஸ் பாதித்த ஒருவருக்குத் தொற்று ஏற்பட்ட ஆறிலிருந்து 21 நாட்களுக்குள் அதற்கான அறிகுறிகள் உடலில் தென்படத் தொடங்கும். கடுமையான காய்ச்சல், தீராத தலைவலி, வாந்தி, தசைவலி மற்றும் கடுமையான மூச்சுத் திணறல் ஆகியவற்றுடன் சிலருக்கு மனநிலை மாற்றம் (Mental Confusion) போன்ற தீவிரமான பாதிப்புகளும் இந்த நிபா வைரஸ் தொற்றின் முக்கிய அறிகுறிகளாகப் பார்க்கப்படுகின்றன.

எதைச் செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும்?

தமிழ்நாடு சுகாதாரத் துறை விடுத்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பொதுமக்கள் தங்களின் உணவு மற்றும் அன்றாடப் பழக்கவழக்கங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மரங்களிலிருந்து தரையில் விழுந்து கிடக்கக்கூடிய பறவைகள் அல்லது வவ்வால்கள் கடித்த பழங்களை எக்காரணம் கொண்டும் உண்ணக் கூடாது. சந்தைகளில் இருந்து வாங்கி வரும் பழங்களை நன்கு சுத்தமான தண்ணீரில் கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும்.

மேலும், பழச்சாறு மற்றும் பதநீர் ஆகியவற்றைத் தற்போது பருகுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் அல்லது மனநிலை மாற்றம் போன்ற அறிகுறிகள் கண்டறியப்பட்டால், பொதுமக்கள் வீட்டிலேயே மருந்துக்களை எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவர்களை அணுகி உரியப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளுக்குப் புதிய விதிகள்

எல்லை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நோயாளிகளை உடனடியாக அனுமதிப்பதற்காகப் பிரத்யேகத் தனி வார்டுகளை (Isolation Wards) அமைக்குமாறு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் தங்களின் முழுமையான பாதுகாப்பு உபகரணங்களை (PPE Kits) கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+