நிர்மலா சீதாராமனின் ஆவேசம்.. திமுகவை சொன்னதுமே.. உடனே பதிலடிக்கு ஓடிவந்த மாநில தலைவர்! யார் பாருங்க
சென்னை: "ராகுல் எங்கே போனார்? கார்கே எங்கே போனார்? கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்" என்று கோரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் பதிலளித்துள்ளது.
இதுகுறித்து தனியார் ஊடகத்திடம் நிர்மலா சீதாராமன் பேசும்போது திமுக அரசையும், காங்கிரஸையும் கடுமையாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

"200-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், பெரும்பாலோனோர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.
5 குழந்தைகள்: அரசாங்கத்தால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளில் உரிமம் பெற்ற மதுபானங்கள் கிடைக்கும் மாநிலத்தில், அதையும் மீறி கள்ளக்குறிச்சி நகரின் மத்தியில் ரசாயனம் கலந்த சட்டவிரோத மதுபானம் வழங்கப்படுகிறது. வீட்டின் பின்புறம் கள்ளச்சாராயம் காய்ச்சியதே காரணம். 5 குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதை ஆகியிருக்கிறார்கள்..
ஆனால், இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதம் நடத்த திமுக அரசு அனுமதி மறுக்கிறது. மதுக்கடைகளில் மதுவகைகள் தாராளமாக கிடைக்கும்போது விஷச்சாராயம் எப்படி கிடைக்கிறது? கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு ஆளுங்கட்சியினர் ஆதரவு அளிப்பதால் மாநில அரசு நடத்தும் விசாரணை முழுமை பெறாது. இதனால், இந்த விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ராகுல் எங்கே? இதற்கெதிராக காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட பேசாதது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எங்கே? ராகுல் காந்தி எங்கே? கள்ளச்சாராயத்தால் பட்டியலினத்தவர்கள் இறக்கும் போது, ராகுல் காந்தியிடம் இருந்து எந்த அறிக்கையும் வருவதில்லை.
வெற்றி உறுதி என தெரிந்ததால், லோக்சபா தேர்தலில் ராகுல் போட்டியிட்டார். ஆனால், கள்ளச்சாராயத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் இறந்தால், ராகுலிடமிருந்து ஒரு அறிக்கை கூட வெளிவராது" என்று கடுமையாக சாடியிருந்தார்.
பொறுப்புள்ள அமைச்சர்: ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இது தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்டுள்ளார். அதுபோலவே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று கூறியிருக்கிறார்.
இப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இதே கருத்தை வலியுறுத்தியிருப்பதுடன், காங்கிரஸையும் சீண்டியிருக்கிறார். எனவே, அவரது கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
செல்வப்பெருந்தகை: இதுகுறித்து செல்வப்பெருந்தகை கூறும்போது, "கள்ளக்குறிச்சி சம்பவம் மிகவும் வேதனையானது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது.
அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் சிபிஐ விசாரணை கேட்கலாம். நிர்மலா சீதாராமன் இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார். பொறுப்புள்ள அமைச்சர் இதை அரசியல் ஆக்காமல், இனிவரும் காலங்களில் இந்த மாதிரி சம்பவங்கள் நிகழாமல் இருக்க ஆலோசனை வழங்கலாம்... ஒட்டுமொத்த தமிழ்நாடும் புறக்கணித்துவிட்ட நிலையில், ஏதாவது காரணங்களை வைத்து எப்படியாவது அரசியல் செய்ய முடியுமா? என்றே அவர் பார்க்கிறார். ஆனால் அது எடுபடாது.
கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் மிதமாக குடித்து கொள்ளலாம் என்று தன்னுடைய சொல்லியிருக்கிறார்.. ஆனால், நாங்கள் காந்திய வாதிகள். முழு மதுவிலக்கைத்தான் விரும்புகிறோம்.. ஏனென்றால், ஆபத்தில்லாமல் குடிக்கலாம் என்பது சமூகத்தில் மது குடிக்கும் பழக்கத்தை இன்னும் ஊக்குவிப்பதுபோல் ஆகிவிடும். ஆரோக்கியமான வாழ்வுக்குத்தான் நாம் எப்போதும் வழிகாட்ட வேண்டும்" என்று செல்வப்பெருந்தகை கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications