நித்யானந்தா ரொம்ப நல்லவருங்க! கண்டிப்பா ஒருநாள் வருவார் பாருங்க! விஸ்வாசம் காட்டும் திருச்சி சூர்யா!
சென்னை : திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும் தற்போது பாஜகவில் இணைந்துள்ள வருமான சூர்யா சிவாவுக்கு சாமியார் நித்தியானந்தா தர்மரட்சகர் விருது கொடுத்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கு நன்றி தெரிவித்துள்ள சூர்யா சிவா, நித்யானந்தா மீது ஆயிரம் சர்ச்சுகள் இருந்தாலும் தமிழகத்தில் பெயர் தெரியும் அளவிற்கு இருக்கும் ஒரே சாமியார் நித்தியானந்தா தான் என புகழாரம் சூட்டியுள்ளார்.
பண மோசடி, பாலியல் பலாத்காரம், மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி சாமியார் நித்தியானந்தா கடந்த சில வருடங்களாக தலைமறைவாகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு அருகில் ஒரு குட்டி தீவு விலைக்கு வாங்கி அதற்கு கைலாச என பெயரிட்டு அங்கே வசித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த பல மாதங்களாக அவர் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், கடந்த குரு பூர்ணிமா அன்று நேரலையில் பேசினார். பின்னர் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நேரலையில் தோன்றியுள்ள நித்தி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

நித்யானந்தா
பின்னர் நித்யானந்தா குறித்த செய்திகள் வெளி வராத நிலையில், திடீரென லைம் லைட்டிற்கு வந்துள்ளதோடு பாஜக பிரபலம் ஒருவருக்கு அவார்ட் கொடுத்து மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். அவர் விருது கொடுத்தது வேறு யாருமல்ல, திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவி ஐக்கியமாகி, தற்போது பாஜக ஓபிசி அணி மாநில பொதுச்செயலாளர் பதவியை பெற்றிருக்கும் சூர்யா சிவாவுக்கு தான். இதனை நித்யானந்தாவே சொல்லியும் இருக்கிறார்.

தர்மரட்சகர் விருது
கைலாசா சார்பில் கடந்த புதன்கிழமை ஆன்லைனில் நடைபெற்ற விஜயதசமி நிகழ்ச்சியில் பேசிய சாமியார் நித்யானந்தா நிகழ்ச்சியில் சூர்யா சிவா கலந்து கொண்டுள்ளதாகக் கூறினார். இதனையடுத்து சூர்யா சிவா தர்மரட்சகர் விருது வழங்கப்படுவதாக நித்யான்ந்தாவின் சீடர்கள் அறிவித்தனர். பாஜக ஓபிசி அணி நிர்வாகியாக இருக்கும் சூர்யா இந்து மதத்தின் புகழை ஊடகங்களில் தொடந்து பரப்பி வருவதால் அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் நித்யானந்தா அதிரடியாகக் கூறினார். இதற்கு சூர்யா சிவா ஆன்லைனில் தோன்றி நன்றியும் தெரிவித்தார்.

சூர்யா சிவா
இந்நிலையில் தனக்கு விருது வழங்கிய நித்யானந்தாவுக்கு சூர்யா சிவா நன்றி தெரிவித்துள்ளதோடு, அவரை புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்," , நித்தியானந்தா மீது ஆயிரம் சர்ச்சுகள் இருக்கலாம் அவரிடம் விருது பெற்றிருக்கிறீர்களே என்று பலரும் கேட்கின்றனர். நித்தியானந்தா மீது குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இதுவரை ஒன்று கூட நிரூபிக்கப்படவில்லை. இதுவரை எந்த குற்றச்சாட்டாவது அவர் மீது நிரூபிக்கப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டு இருக்கிறதா?

குற்றச்சாட்டுகள் 100% தவறு
இந்தியாவில் வட மாநிலங்களில் ஏராளமான சாமியார்கள் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெயர் சொல்லும் அளவுக்கு இருக்கும் ஒரே சாமியார் என்றால் அது நம்ம சாமியார் நித்தியானந்தா தான். நித்யானந்தா மீது அரசியல் ரீதியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவற்றில் இருந்து நிச்சயம் அவர் வெளியே வருவார். நித்தியானந்தா பிரபலமாக இருப்பதால் அவர் மீது பொய்யான புகார்கள் வருவது மிக சாதாரண விஷயம். அவர் மீதும் குற்றச்சாட்டுகள் 100% தவறு" எனக் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications