கையெழுத்து போடுங்க.. இல்லைனா அவ்வளவுதான்.. எடப்பாடியின் ரகசிய மூவ்.. ஆடிப்போன சிவி சண்முகம்
சென்னை: அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசலும், அதிகாரப் போட்டியும் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், கட்சியின் தலைமை மீதும், அதன் செயல்பாடுகள் மீதும் ரத்தத்தின் ரத்தங்கள் பலரும் கடுமையான அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தச் சூழலில், அதிமுகவில் தற்போதைய ஹாட் டாபிக் - 'பொதுக்குழு' விவகாரம் தான்.

பொதுக்குழுவை தவிர்க்கும் எடப்பாடி: பின்னணி என்ன?
அதிமுகவில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும், கட்சியின் சீனியர்கள் பலரும் உடனடியாகப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும், தொண்டர்களின் மனநிலையை விவாதிக்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
ஆனால், இந்தச் சூழலில் பொதுக்குழுவைக் கூட்டினால் அது தனக்கு எதிரான தளமாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில், எடப்பாடி பழனிசாமி அதற்கு உடன்பட மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனைத் தவிர்க்க, தனது ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களிடம் "தற்போது பொதுக்குழு கூட்டம் கூட்டத் தேவையில்லை" என்று எழுதி வாங்கி, அதில் கையெழுத்துப் பெறும் அதிரடிப் படலத்தையும் எடப்பாடி தரப்பு ரகசியமாகத் தொடங்கியது.
இருப்பினும், இந்த வியூகம் எடப்பாடிக்கு அத்தனை எளிதாக அமையவில்லை. "பொதுக்குழு கூட்டத் தேவையில்லை" என்ற கடிதத்தில் கையெழுத்துப் போட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. கட்சியின் தற்போதைய நிலையை விவாதிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக நின்றுள்ளனர்.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வெடித்த விவாதம்
கையெழுத்து வாங்கும் படலம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே, நிலைமையைச் சமாளிக்க நேற்று அவசரமாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார் எடப்பாடி பழனிசாமி. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் உள்கட்சி அரசியல் மட்டுமன்றி, தமிழகத்தின் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) குறித்தும் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.
கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடியின் விசுவாசமிக்க சில மாவட்டச் செயலாளர்கள், அவரிடம் ஒரு புதிய அரசியல் வியூகத்தை முன்வைத்துள்ளனர். அவர்கள் பேசியதாவது:
"அண்ணே, கட்சியில் உங்களுக்குத்தான் இன்னமும் பெருவாரியான ஆதரவு இருக்கிறது. அப்படி இருக்கும்போது, நாம் ஏன் பொதுக்குழுவைக் கூட்ட யோசிக்க வேண்டும்? தைரியமாகப் பொதுக்குழுவைக் கூட்டுங்கள். அங்கே நமது பலத்தை நிரூபித்து, அதிருப்தியாளர்களின் முகத்தில் கரியைப் பூச வேண்டும். பொதுக்குழுவில் அவர்களுக்குப் பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பதை நாம் பகிரங்கமாக அம்பலப்படுத்த வேண்டும்."
தவெக-வுக்கு வைக்கப்படும் 'செக்'
மேலும், இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பெயரையும் மாவட்டச் செயலாளர்கள் இழுத்துள்ளனர். அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் சீனியர்களையும், முக்கிய விக்கெட்டுகளையும் தவெக தலைமை தன்பக்கம் இழுக்கக் கணக்கு போடுவதாக அரசியல் வட்டாரங்களில் ஒரு பேச்சு நிலவுகிறது.
இதைச் சுட்டிக்காட்டிய மா.செ.க்கள், "இங்குள்ள அதிருப்தியாளர்களை நம்பி, அவர்களைத் தூண்டில் போட்டு இழுக்கக் காத்திருக்கும் தவெக தலைமைக்கும் இதன் மூலம் நாம் ஒரு மரண 'செக்' வைக்க முடியும். அதிமுகவில் இவர்களுக்கு எந்தச் செல்வாக்கும் இல்லை என்பது பொதுக்குழு மூலம் நிரூபணமானால், தவெக இவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்காது. அதன் பிறகு, தேர்தல் ஆணையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ எந்த ஒரு சட்டரீதியான சிக்கல் வந்தாலும், பொதுக்குழுவின் ஆதரவை காட்டி நாம் எளிதாக வெல்ல முடியும்" என்று எடப்பாடி பழனிசாமியிடம் அழுத்திப் பேசியுள்ளனர்.
அதிருப்தியாளர்களை ஒடுக்க நினைக்கும் எடப்பாடிக்கு, இந்த மா.செ.க்களின் யோசனை ஒருபுறம் தைரியத்தைக் கொடுத்தாலும், பொதுக்குழுவில் ஏதேனும் ட்விஸ்ட் நடந்துவிட்டால் என்ன செய்வது என்ற தயக்கமும் அவரிடம் நீடிப்பதாகத் தெரிகிறது. எது எப்படியோ, அதிமுகவின் இந்த உள்குத்து அரசியல், தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக மாறியுள்ளது என்பது மட்டும் நிதர்சனம்.












Click it and Unblock the Notifications