Savukku Shankar: என்னை 'ப்ளாக் மெயில்' செய்ய வேண்டாம்.. அது பலிக்காது! சவுக்கு சங்கர் தரப்பிடம் காட்டமாக சொன்ன நீதிபதி
சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து விலக முடியாது என்று நீதிபதி வேல்முருகன் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த நீதிமன்றத்தையும் 'ப்ளாக் மெயில்' செய்ய முயற்சிக்க வேண்டாம். அது பலிக்காது எனவும் ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் கூறினார்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மாதம் 13 ஆம் தேதி மோசடி வழக்குகளில் போலீசார் கைது செய்தனர். சென்னை ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளின் அடிப்படையில சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

ஜாமீன் வழங்க கோரி மனு
இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கருக்கு மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு வரும் மார்ச் 25 வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது.
சாட்சிகளை மிரட்டுவதாக
இதையடுத்து ஜாமீனில் வெளியான சவுக்கு சங்கர் யூடியூப் பக்கங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்ற சவுக்கு சங்கர் தொடர்ந்து யூடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும், சாட்சிகளை மிரட்டுவதாகவும் கூறிய போலீசார் அவரது இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஜாமீன் பெற்றுவிட்டு இப்படி செய்யலாமா?
இந்த மனு கடந்த 8 ஆம் தேதி நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் எம். ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ், சவுக்கு சங்கர் சாட்சிகளை மிரட்டி தொடர்ந்து தனது யூ டியூப் சேனலில் பேசி வருவதாகத் தெரிவித்தார்.
மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்றுவிட்டு இப்படி செய்யலாமா? என சவுக்கு சங்கர் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் காவல்துறை சேகரித்து வைக்குமாறு அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கின் விசாரணையை இன்றைக்கு (ஜனவரி 19) ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
'ப்ளாக் மெயில்' செய்ய முயற்சிக்க வேண்டாம்
இதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது, சவுக்கு சங்கர் தரப்பிடம் நீதிபதி வேல்முருகன் காட்டமான கருத்துக்களை முன்வைத்தார். அதாவது, சவுக்கு சங்கர் இந்த நீதிமன்றத்தை 'ப்ளாக் மெயில்' செய்ய முயற்சிக்க வேண்டாம். அது பலிக்காது. சவுக்கு சங்கர் தன் மீது நம்பிக்கை இல்லை என மனு தாக்கல் செய்திருந்தாலும், அவருடைய ஜாமீனை ரத்து செய்ய கோரும் வழக்கிலிருந்து தான் விலக போவதில்லை என்று திட்டவட்டமாக கூறினார்.
நீதிபதி மேலும் கூறுகையில், "தனது 20 ஆண்டு (மாவட்ட நீதிமன்றம் 11 ஆண்டுகள், ஐகோர்ட்டில் 9 ஆண்டுகள்) கால பணிக்காலத்தில் எந்த ஒரு வழக்கில் இருந்தும் இதுவரை தான் விலகியது இல்லை என்றும் சவுக்கு சங்கர் வழக்கிலும் விலக போவது இல்லை என்றும் திட்டவட்டமாக கூறினார். மேலும் நீதிபதி வேல்முருகன் கூறியதாவது:-
முகத்தைப் பார்ப்பதில்லை, ஆவணங்களை பார்க்கிறோம்
இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவதற்காக தலைமை நீதிபதியை அணுகி நிர்வாக உத்தரவு பெறுவது வழக்கறிஞரின் முடிவை பொருத்தது. ஆனால், "இந்த வழக்கு என்னிடம் இருக்கும் வரை, சட்டப்படி நான் தான் இதைத் தீர்ப்பேன். நீதிமன்றத்திற்கு எதிராக நீங்கள் கூறும் கருத்துகள் குறித்து எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.
தனி நபர்களைப் பற்றியும் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. நாங்கள் யாருடைய முகத்தைப் பார்ப்பதில்லை. ஆவணங்களைத்தான் பார்க்கிறோம். நான் மனசாட்சி படியே செயல்படுவேன். யாருக்கும் அச்சப்பட மாட்டேன்" என்றார்.












Click it and Unblock the Notifications